சென்னையில் பேனர் விழுந்து விபத்தில் மரணமடைந்த சுபஸ்ரீ வழக்கில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால், அவருடைய உறவினர் மேகநாதன் ஆகிய இருவரின் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை, பள்ளிக்கரணையில் திருமண நிகழ்ச்சிக்கு கடந்த செப்டம்பர் மாதம் சாலை நடுவே அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்து இரு சக்கர வாகனத்தில் வந்த சுபஸ்ரீ என்ற பெண் கீழே விழுந்ததில் அவரை தொடர்ந்து பின்னால் வந்த லாரி மோதி பலியானார்.
சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமான விதிமீறல் பேனர் வைத்த விவகாரத்தில் பள்ளிக்கரணை காவல் நிலையத்திலும், பரங்கிமலை போக்குவரத்து காவல்துறையும் வழக்குப் பதிவு செய்தனர். தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு செப்டம்பர் 27 ஆம் தேதி அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால், அவரது உறவினர் மேகநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டு, செப்டம்பர் 28 ஆம் தேதி நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர்.
இவர்களின் ஜாமீன் மனுக்களை செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றம் அக்டோபர் 4 தேதி தள்ளுபடி செய்தது.
பின்னர், இருவரும் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், திருமணத்திற்காக வாழ்த்து கூறி கட்சியினர் பேனர் வைத்ததாகவும், வேண்டுமென்றே, உள்நோக்கத்தோடு சாலையில் பேனர் வைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எண்ணம் ஏதும் தங்களுக்கு இல்லை எனவும் மனுவில் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கு கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் பதிலளிக்க அவகாசம் கேட்கப்பட்டது.
இந்நிலையில், இவ்வழக்கு இன்று மீண்டும் நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன் ஆஜரானார்.
அப்போது மனுதரார் தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி, ஒரு கட்சி பொறுப்பில் இருக்கிறீர்கள். உங்கள் வீட்டு விசேசத்திற்கு வைத்த பேனர் விழுந்து பெண் பலியாகி இருக்கிறார். அப்படி இருக்கும்போது நீங்களே முன் வந்து காவல் துறை விசாரணைக்கு ஏன் ஒத்துழைப்பு வழங்கவில்லை. ஏன் தலைமறைவானீர்கள் என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த ஜெயகோபால் தரப்பு வழக்கறிஞர் மனுதரார் தலைமறைவாகவில்லை. கேரளாவிற்கு சிகிச்சைக்கு சென்றிருந்தேன் மற்றபடி காவல் துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக தெரிவித்து தற்போதைய நிலையில் ஜாமீன் மனுவை திரும்ப பெறுவதாகவும் அதற்கு நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இந்த வழக்கில் சுபஸ்ரீ தந்தை ரவி சார்பில் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கபட்டது. மனுதரார்கள் அரசியல் செல்வாக்கு மிக்கவர்கள். ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைப்பார்கள் சாட்சிகள் மிரட்ட வாய்ப்புள்ளது எனவே இருவருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது. ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.
இதனையடுத்து அனைத்து தரப்பு வாதங்களுக்குப் பிறகு, நீதிபதி சி.வி.கார்த்திகேயன், அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால், மேகநாதன் இருவரின் ஜாமீன் மனுக்களையும் வாபஸ் பெற அனுமதித்து அவர்களுடைய ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டர்.