திருச்சி மாநகராட்சி பகுதிகளில் வாகனங்களில் காய்கறி, பழங்கள் விற்பனை செய்வதும், பல்வேறு பகுதிகளில் வார சந்தைகளும் நடந்து வருகிறது.
குறிப்பாக, தில்லைநகர் 80 அடி ரோடு, உறையூர் ஹவுசிங் யூனிட், லிங்கம் நகர், ஸ்ரீரங்கம், பாத்திமாநகர், ராமலிங்கநகர் விரிவாக்கம், வயர்லெஸ் ரோடு, உடையாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாரச்சந்தைகள் நடந்து வருகிறது.
இங்கு அல்லித்துறை, எட்டரை கோப்பு, தாயனூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் இந்த வார சந்தைகளில் நேரடியாக தாங்கள் விவசாயம் செய்த பொருட்களை கொண்டு வந்து வியாபாரம் செய்து வந்தனர். இது அந்தந்த பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வசதியாக இருந்ததால் பொதுமக்களிடையே வரவேற்பும் அதிகமாக இருந்தது.
அதேநேரம், இந்த வார சந்தைகளால் அந்தப் பகுதிகளில் நிரந்தரமாக கடை அமைத்துள்ள உரிமையாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகக்கூறி, வார சந்தைகளுக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்தநிலையில் தற்போது மாநகரப் பகுதிகளில் குடியிருப்பு மற்றும் சாலைகளில் வாரச் சந்தைகள், தினசரி மாலை நேர சந்தைகள் நடத்த மாநகராட்சி நிர்வாகம் திடீர் தடை விதித்துள்ளது.
/indian-express-tamil/media/post_attachments/30c396fd-79a.jpg)
இது குறித்து மாநகராட்சி வட்டாரத்தில் விசாரித்தபோது, மாநகரில் கடை அமைத்துள்ளவர்கள் மாநகராட்சிக்கு தொழில்வரி செலுத்தி வருகின்றனர். ஆனால் வார சந்தை வியாபாரிகள் எதுவும் செலுத்துவதில்லை. இதுபோன்ற வாரச் சந்தைகள் சாலைகளில் நடத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு குப்பைகள் அதிகமாகி மாநகராட்சிக்கு கூடுதல் பணிச்சுமையும், நேர விரயமும் ஏற்படுகிறது.
ஆகவே புதிய பகுதிகள், மற்றும் சாலைகளில் உரிய அனுமதியின்றி நடத்தப்படும் வாரச்சந்தை உள்ளிட்ட கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், மாநகராட்சியிடம் உரிய தொகையை செலுத்தி அனுமதி பெற்று வாரச்சந்தையை நடத்திக் கொள்ளலாம். ஆனால் ஏற்கனவே இருக்கும் சந்தைகளுக்கு அருகில் வாரச் சந்தைகளை நடத்த மாநகராட்சி அனுமதிக்காது.
/indian-express-tamil/media/post_attachments/39594681-38b.jpg)
சிறுகுறு விவசாயிகள், வியாபாரிகள் வழக்கம் போல் தள்ளுவண்டி வாகனங்கள் மூலமும், வழக்கமான மார்க்கெட் பகுதிகளிலும் வியாபாரம் செய்ய எந்த தடையும் விதிக்கப்படவில்லை என்றனர்.
இந்தசூழலில் தில்லை நகர் உள்ளிட்ட சில பகுதிகளில் வாரச்சந்தை போட சில வியாபாரிகள் வந்தநிலையில், மாநகராட்சி நிர்வாகம், காவல்துறை அவர்களை தடுத்து திருப்பி அனுப்பியது. அப்பகுதியில் உள்ள குடியிருப்பினர் மற்றும் பாஜக் பிரமுகர்கள் வியாபாரிகளுக்கு ஆதரவாக போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சில பகுதிகளில் பரபரப்பு நிலவியது.
ஒட்டுமொத்தமாக வாரச்சந்தைகளுக்கு மாநகராட்சி தடை விதிக்கவில்லை, ஏற்கனவே வியாபார நிறுவனங்கள் கடைகள் கொண்டு வியாபாரம் செய்யும் பகுதிகளில் மட்டுமே வாரச்சந்தைகளுக்கு தடை விதித்திருப்பதாக மாநகராட்சி அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“