பாபு ராஜேந்திரன் புதுச்சேரி
சுதேஷ் தர்ஷன் 2.0 திட்டத்தில் ரூ. 150 கோடி பணிகளுக்கு சுற்றுலா திட்ட அறிக்கை தனியார் நிறுவனத்துடன் புதுவை சுற்றுலாத்துறை ஒப்பந்தம் செய்துள்ளது.
மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் "சுதேஷ் தர்ஷன் 2.0" திட்டத்தில் கீழ் ரூ 150 கோடியில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதற்கான மூலத்திட்டம் மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் மூலம் ஐதராபாத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் திட்ட ஆலோசகராக தேர்வாகியுள்ளது.
இந்த நிறுவனம், சுற்றுலாத்துறை இடையேயான திட்ட ஆலோசனை ஒப்பந்த நிகழ்ச்சி முதல் அமைச்சர் அலுவலகத்தில் நடந்தது. முதல் அமைச்சர் ரங்கசாமி, சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமைச் செயலர் ராஜீவ் வர்மா ஆகியோர் முன்னிலையில் சுற்றுலாத் துறை இயக்குநர் பிரியர்தர்ஷினி மற்றும் தனியார் நிறுவன துறைத்தலைவர் ரத்தீஷ் ஆகியோர் கையெழுத்திட்டனர்
சர்வதேச பல்லுயிர் தினம்
புதுவை பல்லுயிர் பேரவையும், வனம் மற்றும் வனவிலங்கு துறையும் இணைந்து சர்வதேச பல்லுயிர் தினத்தை கொண்டாடினர். பல்லுயிர் மேலாண்மைக் குழுக்கள் தொடங்கப்பட்ட 14 கிராம பஞ்சாயத்துகளுக்கு தலா ரூ. 60 ஆயிரமும், உழவர்கரை நகராட்சிக்கு ரூ. 1 லட்சமும் முதல் அமைச்சர் ரங்கசாமி வழங்கினார். அத்துடன் புதுவை வனத்துறை சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது.
கடந்த 13ந் தேதி காரைக்கால் துறைமுகப்பகுதியில் 45 அடி நீளமுள்ள 15 டன் எடை உள்ள திமிங்கலம் கரை ஒதுங்கியது. அது உயிருடன் இருந்ததால் பட்டினச்சேரி மீனவர்கள் 13 பேரும், துறைமுக ஊழியர்கள் 7 பேரும் கப்பல் படை உதவியுடன் காலை 11 முதல் இரவு 7 வரை மீட்பு பணியில் ஈடுபட்டு மீண்டும் கடலில் சேர்த்தனர். உயிரை பணயம் வைத்து திமிங்கலத்தை கடலுக்குள் கொண்டு செல்ல உதவிய மீனவர்கள், துறைமுக ஊழியர்கள் 20 பேருக்கு தலா ரூ. 10 ஆயிரம் பரிசு தரப்பட்டது. நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் தேனீ ஜெயக்குமார், தலைமை வனஉயிரினக் காப்பாளர் வஞ்சுளவல்ளி ஆகியோர் பங்கேற்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“