நீட் தேர்வு தோல்வியால் மாணவிகள் தொடர் தற்கொலை தொடர்பாக அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கேட்டு சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டது. மனுவாக தாக்கல் செய்தால் அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் நீதிபதி கிருபாகரன் அனுமதியளித்தார்.
நீட் தேர்வு தோல்வியால் மருத்து படிப்பு கனவு பாழானதால், கடந்த ஆண்டு அரியலூரை சேர்ந்த அனிதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார். அந்த சமயத்தில் மருத்துவப் படிப்பில் இடம் கோருவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் கிருத்திகா என்பவர் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், நீட் தேர்வு தோல்வியால் ஏற்படும் மரணங்களை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்வுக்கு முன்பாக உரிய பயிற்சிகள் அளிக்க வேண்டும், தேர்வு பயத்தை போக்கி சிபிஎஸ்இ தேர்வு வாரியம் உள்ளிட்ட அமைப்புகள் நடத்தும் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த ஆண்டு ப்ளஸ் 2 தேர்வில் சிறப்பான மதிப்பெண்களை எடுத்த விழுப்புரத்தை சேர்ந்த பிரதீபாவும், திருச்சியை சேர்ந்த சுபஸ்ரீயும் நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்டனர்.
இது தொடர்பாக நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் வழக்கறிஞர் சூரியபிரகாசம் இன்று ஆஜராகி, முறையீடு ஒன்றை செய்தார். அதில் நீட் தேர்வு தொடர்பாக கடந்த ஆண்டு உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவினை தமிழக அரசு இதுவரை நிறைவேற்றாததால்தான் இந்த ஆண்டும் மாணவிகள் இரண்டு பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதால், தமிழக அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.
இதனையேற்ற நீதிபதி கிருபாகரன், இது தொடர்பாக மனுவாக தாக்கல் செய்தால் அடுத்த வாரம் செவ்வாய்க் கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அனுமதி அளித்தார்.