திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுபட்டியில் பயன்படுத்தப்படாத ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் மூன்று நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டான். குழந்தை சுஜித்தின் மரணம் தமிழக மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. குழந்தையின் பெற்றோர்கள் மீளாத் துயரில் மூழ்கியுள்ளனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பிரிட்டோ ஆரோக்கியராஜ் - கலாமேரி. கட்டடதொழிலாளியான பிரிட்டோ வீட்டின் அருகே விவசாயமும் செய்துவந்தார். இவர்களுடைய மகன்கள் புனித் ரோசன் (வயது 4), சுஜித் வில்சன் (வயது 2). பிரிட்டோ தனது வீட்டு தோட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஆழ்துளைக் கிணறு அமைத்தனர். அதில் தண்ணீர் கிடைக்காததால் அதை மண்ணால் மூடிவிட்டனர். இந்த ஆழ்துளைக் கிணறு சமீபத்தில் பெய்த மழையால் மண் அரிப்பில் திறந்துகொண்டதை யாரும் கவனிக்கவில்லை. இந்த ஆழ்துளைக் கிணறுதான் தங்கள் குழந்தை சுஜித்தின் உயிருக்கு ஆபத்தாகப் போகிறது என்பது அவர்களுக்கு தெரியாமல்போனது.
அக்டோபர் 25 ஆம் தேதி மாலை 5.40 மணிக்கு பிரிட்டோ வீட்டுத் தோட்டத்தில் தனது சகோதரன் நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை சுஜித் வில்சன் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மீட்பு பணி தொடங்கியது.
தீயணைப்பு படை வீரர்கள், மதுரை மணிகண்டன், கோவை ரூபின் டேனியல், ஐ.ஐ.டி குவிவினர், புதுக்கோட்டை குழுவினர், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், என்.எல்.சி. பணியாளர்கள், ரிக் இயந்திரம் இயக்குபவர்கள், திருச்சி மாவட்ட நிர்வாகம் என பலரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், எம்.பி ஜோதிமணி, வருவாய்த்துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் என பலரும் மீட்பு பணிகளைக் கண்காணித்து நடவடிக்கைகளை மேற்கொண்டு அங்கேயே இருந்தனர். ஆனாலும், மீட்பு பணியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
80 மணி நேர மீட்பு பணி போராட்டத்துக்குப் பிறகு இன்று அதிகாலை 4.30 மணி அளவில் குழந்தை சுஜித் ஆழ்துளைக் கிணற்றுக்குள் ஏற்கெனவே இறந்துவிட்டான். உடல் சிதையத்தொடங்கிவிட்டது என்று கூறி இடுக்கி போன்ற ஒரு கருவியைப் பயன்படுத்தி குழந்தையின் உடலை மேலே எடுத்தனர்.
இந்த துயரச் செய்தி அதிகாலையில் தமிழக மக்களின் தலையில் பேரிடியாக விழுந்தது.
குழந்தையின் உடல் சிதைந்திருந்ததால் உடலை தார்பாய் போட்டு மூடித்தான் மீட்புக்குழு வீரர்கள் தூக்கி வந்தனர். உடலைப் பார்த்த பெற்றோர்கள் உறவினர்கள், ஊர் மக்கள் கதறி அழுதனர். தமிழகமே சோகத்தில் மூழ்கியது.
ஒரு குழந்தையை மீட்க முடியாத இயலாமையில் அமைச்சர்களும் அரசு நிர்வாகமும் பொதுமக்களுடன் துயரத்தை பகிர்ந்துகொண்டது.
குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்ததிலிருந்து சுஜித்தின் தாய் கலாமேரி அழுதழுது அழுவதற்குகூட கண்ணீர் இன்றி திராணி இல்லாமல் நொடிந்துபோயிருந்த இருந்த அவர் குழந்தையின் உடலைப் பார்த்து கதறி அழுதார். அந்த காட்சி பார்த்தவர் அனைவரையும் உலுக்கியது. சுஜித்தின் இழப்பால் அவர்களுடைய குடும்பம் மீளாத் துயரத்தில் மூழ்கியுள்ளது.
குழந்தையின் அத்தை ஜூலியா ஊடகங்களிடம் கூறுகையில், “துரதிருஷ்டவசமாக நாங்கள் கடைசி நேரத்தில்கூட எங்கள் குழந்தையின் முகத்தைப் பார்க்க முடியவில்லை. குழந்தையின் உடல் மிக மோசமாக சிதைந்திருந்ததால் யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை. நாங்கள் சுஜித்தின் உடலை வாங்கியபோது உடல் முழுவதும் மூடப்பட்டிருந்தது. குழந்தையின் மரணம் எங்கள் குடும்பத்துக்கு மிகப்பெரிய இழப்பு.
முதல் நாள் மீட்பு பணியின்போது குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டுவிடுவான் என்று நாங்கள் எல்லோருமே நம்பினோம். ஆனால், அடுத்த நாள் அந்த நம்பிக்கையெல்லாம் போய்விட்டது. கடைசியில் குழந்தையின் சிதைந்த உடல்தான் கிடைத்தது. குழந்தையின் உடலை வாங்கும்போது மிகப்பெரிய வலியாக இருந்தது.” என்று ஜூலியா தனது வேதனையைத் தெரிவித்தார்.
சுஜித்தின் மாமா, எவ்வளவோ கடுமையாக முயற்சி செய்தும் நம்மால் குழந்தையை உயிருடன் மீட்க முடியவில்லை. குழந்தையை அடக்கம் செய்வதற்காகவாவது இவ்வளவு முயற்சி எடுத்து உடலை ஒப்படைத்த அரசுக்கு தழுதழுத்த குரலில் நன்றி கூறினார்.
மேலும், வருங்காலத்தில் இதுபோல சம்பவங்கள் நடக்காமல் தடுக்க தமிழக அரசு மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.