சுஜித் மீட்புச் செலவு சர்ச்சை: இது தேவையா?

சுஜித் மீட்புச் செலவுக் கணக்கை கோரி ஆர்.டி.ஐ ஆர்வலர்கள் சிலர் களம் இறங்கியிருப்பதும் லேட்டஸ்ட் தகவல்!

By: Updated: November 1, 2019, 05:36:10 PM

Sujith Latest News: சுஜித் வில்சன் மீட்புச் செலவு என போலியாக ஒரு தொகையை குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் சர்ச்சை கிளப்புகிறார்கள் பலரும்! அதேபோல சுஜித்தின் தாயார் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பாகவும் சர்ச்சை பரவுகிறது.

சுஜித் வில்சன் என்கிற 2 வயது பாலகன் உயிருடன் மீட்கப்பட வேண்டும் என தமிழ்நாடு மட்டுமன்றி, இந்தியா முழுக்க பலரும் உருகினர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மணக்காபட்டியை சேர்ந்த ஏழைத் தம்பதியரின் மகனான சுஜித் வில்சன் கடந்த 25-ம் தேதி போர்வெல் கிணற்றில் விழுந்தான். 80 மணி நேர இடைவிடாப் போராட்டத்திற்கு பிறகு அவனது பிணத்தை மட்டுமே அதிகாரிகளால் மீட்க முடிந்தது.


சுஜித்தை மீட்க ரிக் எந்திரம், போர்வெல் போடும் எந்திரங்கள் என பலவற்றை அதிகாரிகள் கொண்டு வந்தனர். தனியார் நிறுவனமான எல் அண்ட் டி, அரசு பொதுத்துறை நிறுவனங்களான ஓ.என்.ஜி.சி., நெய்வேலி நிலக்கரி நிறுவனம் ஆகியவற்றின் எந்திரங்களும், தொழில்நுட்ப நிபுணர்களும் இதில் முழுமையாக இறங்கினர்.

எந்திரத் தளவாட வாடகைச் செலவுகள், டீசல் செலவு, மீட்புப் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள், ஊழியர்களின் சாப்பாடு மற்றும் இதரச் செலவுகள் என 11 கோடி ரூபாய் இதற்கான செலவானதாக சிலர் சமூக வலைதளத்தில் தகவல்களை பரப்பினர். இதற்கு திருச்சி மாவட்ட நிர்வாகம் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன், ரூ5 லட்சம் அளவுக்கே செலவானதாக கூறப்பட்டது.

இதற்கிடையே இங்கு செலவான பெரும் தொகையை எல் அண்ட் டி உள்ளிட்ட தனியார் பெரும் நிறுவனங்களில் தலையில் அரசு சுமத்திவிட்டதாக சிலர் தகவல்களை பரப்பினர். இதற்கும் அரசுத் தரப்பில் மறுப்பு தெரிவிக்கிறார்கள். தமிழ்நாடு வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் இது தொடர்பாக கூறுகையில், ‘இது போன்ற உயிர் மீட்புப் பணிகளில் அரசு செலவுக் கணக்கைப் பார்ப்பதில்லை’ என்றார் நிருபர்களிடம்!

இவை ஒருபுறம் இருக்க, மரணம் அடைந்த சுஜித்தின் குடும்பத்திற்கு ரூ1 கோடி வழங்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் வைத்த கோரிக்கை, தனது மகனுக்கு கோவில் கட்ட விரும்புவதாக சுஜித்தின் தாயார் அளித்த பேட்டி, தனது மனைவிக்கு அரசு வேலை வழங்கவேண்டும் என சுஜித்தின் தந்தை வைத்த வேண்டுகோள் என ஒவ்வொன்றும் வாட்ஸ் அப்களில் வறுபடவே செய்கிறது.

இவை போக சுஜித்தின் உடலை ஏன் வெளியே காட்டவில்லை? டாக்டர்கள் போராட்டம் உள்ளிட்ட பிரச்னைகளை திசைதிருப்ப சுஜித் உடலை எடுக்காமல் அரசு தாமதப்படுத்தியதா? என ஆயிரம் சந்தேகக் கணைகள்! சுஜித்திற்காக இரங்கிய அதே ஊர் உலகம்தான் இப்போது சர்ச்சைகளையும் மென்று துப்புகிறது. எனினும் சுஜித்தின் பெற்றோர் இந்த விஷயத்தில் அரசு நடவடிக்கையை முழுமையாக பாராட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

சுஜித் மீட்புச் செலவுக் கணக்கை கோரி ஆர்.டி.ஐ ஆர்வலர்கள் சிலர் களம் இறங்கியிருப்பதும் லேட்டஸ்ட் தகவல்!

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Sujith wilson borewell rescue tamil news tamil nadu government expenses

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X