கலங்க வைக்கும் புகைப்படம்…. அழக் கூட கண்ணீர் இல்லை! – சுஜித் பெற்றோரின் நிலை என்ன?

சுர்ஜித்தை மீட்கும் பணி நடைபெற்று வந்தாலும், மறுபக்கம் அவனுடைய பெற்றோருக்கு தகுந்த நபர்கள் கொண்டு தொடர்ந்து கவுன்சலிங் கொடுக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார்

By: October 28, 2019, 5:19:40 PM

நாள் : 25-10-2019

நேரம் : மாலை 5.30 – 5.40

இடம்: சோளத்தட்டை தோட்டம், நடுக்காட்டுப்பட்டி கிராமம், மணப்பாறை, திருச்சி மாவட்டம்.

வானம் பார்த்த பூமியில் வருமானம் பார்க்க, தன் தந்தை ஆரோக்கியராஜ் உருவாக்கிய சோளத்தட்டை தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தான் 2 வயதே ஆன சுஜித்.


அவ்வப்போது பெய்த மழையால், தோட்டமெங்கும் கால் பதிக்கும் இடமெல்லாம் சேற்றின் வாசம். அதில் பயமறியா மழலை அங்கும் இங்குமாய் ஓடிக் கொண்டிருக்க, அங்கு புதர்களுக்கு இடையே காத்திருந்தது, 5 ஆண்டுகளுக்கு முன்பு தோண்டி மூடப்பட்டிருந்த 600 அடி பள்ளம்.

அத்தனை இடங்களில் கால்கள் பதித்த சுஜித், அந்த இடத்திலும் கால் பதிக்க, தான் தாய் கலாமேரி கண் எதிரே பூமி அன்னையின் கோர பள்ளத்தில் வீழ்கிறான்.

முதலில் 5 அடி, பிறகு 20 அடி, பிறகு 30  அடி என்று பள்ளம் அவனை மெல்ல மெல்ல விழுங்க, தாய் கலாமேரியின் அலறல் சத்தம், தமிழகத்தின் மத்திய பகுதியையே அதிர வைத்தது.

தகவல் அறிந்து மாநில அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், என்.நடராஜன், எஸ்.வளர்மதி, மணப்பாறை எம்எல்ஏ சந்திரசேகர், மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, எஸ்பி ஜியாவுல் ஹக் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினார்கள்.

குழந்தை குழிக்குள் விழுந்ததில் இருந்து, அவனை மீட்க மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் இதுவரை தோல்வியிலேயே முடிந்திருக்கிறது.

ரிக் மெஷின், போர்வெல் என்று அதிநவீன கருவிகள் கொண்டு சுர்ஜித்தை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

25ம் தேதி சுர்ஜித் விழுந்ததில் இருந்து, இந்த நிமிடம் வரை, தங்கள் மகனின் குரலுக்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றனர் சுர்ஜித் பெற்றோர்.

அழுது அழுது கண்ணீர் வற்றி, அழக் கூட திராணியற்று, அப்படியே அழுதாலும் கண்ணீர் கூட எட்டிப் பார்க்க மறுக்கும் சூழலை நாம் பார்க்கும் போதும் நமது கண்கள் குளமாவதை தடுக்க முடியவில்லை.

குறிப்பாக, சுஜித்தின் தாய் கலாமேரி தன் மகனை எதிர்நோக்கி நூறு சதவிகித நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்.

எதிர்பார்ப்புடன் சுர்ஜித் தாய் கலாமேரி எதிர்பார்ப்புடன் சுர்ஜித் தாய் கலாமேரி

கரூர் எம்.பி. ஜோதிமணி, சுஜித் தாய் கலாமேரிக்கு தன்னால் முடிந்த வரை ஆறுதல் தெரிவித்தார். எப்படியும் மீட்டுவிடலாம் என்ற நம்பிக்கையில் அவர் கூறினாலும், சிறுவன் விழுந்து 4 நாட்கள் ஆகியும், இன்னமும் மீட்க முடியாததால், ஆறுதல் சொல்லவே தனக்கு கூச்சமாக இருப்பதாக ஜோதிமணி தெரிவித்திருக்கிறார்.

வருவாய் ஆணையர் ராதாகிருஷ்ணன், பெற்றோர்களுக்கு கவுன்சலிங் கொடுக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார். சுர்ஜித்தை மீட்கும் பணி நடைபெற்று வந்தாலும், மறுபக்கம் அவனுடைய பெற்றோருக்கு தகுந்த நபர்கள் கொண்டு தொடர்ந்து கவுன்சலிங் கொடுக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.

இதுதவிர, திரைத்துறையைச் சேர்ந்தவர்களும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் நடுக்காட்டுப்பட்டி வந்து மீட்புப் பணிகளை பார்வையிட்டும், கலங்கி நிற்கும் சுர்ஜித் பெற்றோருக்கு ஆறுதல் கூறியும் வருகின்றனர்.

பலதரப்பட்ட மக்களின் ஆறுதல் வார்த்தைகள் தான், சுர்ஜித் பெற்றோரை இன்னமும் நம்பிக்கையுடன் வைத்திருக்கின்றன.

மீண்டு வா சுஜித்!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Sujith wilson borwell rescue operation trichy manapparai sujith parents

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X