Sujith Wilson News: திருச்சி மணப்பாறை அருகே போர்வெல்லில் விழுந்து பலியான சுஜித் உடல் மற்றும் முகத்தை ஏன் காட்டவில்லை? என்பதற்கு ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். விளக்கம் அளித்தார். உரிய விதிமுறைகளை பின்பற்றியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ‘ஆழ்துளை கிணற்றில் விழுந்து துர்நாற்றம் வீசியதால் குழந்தை சுஜித்தின் உடல் வெளியே எடுக்கப்பட்டது. சுஜித்தை மீட்கும் பணிகளில் அமைச்சர்கள், அதிகாரிகள், தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினர், மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், போலீஸார், தன்னார்வலர்கள், வருவாய் அதிகாரிகள், பாதுகாப்புப் படையினர் என 600 பேர் இணைந்து செயல்பட்டோம்.
துரதிர்ஷ்டவசமாகச் சிறுவன் இறந்துவிட்டான். இறந்தவர்களை எப்படி மீட்க வேண்டும் என்று ஒரு வழிகாட்டுதல் உள்ளது. அதைப் பின்பற்றியே சுஜித்தின் உடலை நாங்கள் வெளியில் எடுத்தோம். குழந்தை சுஜித்தை மீட்பதற்கு, மனித சக்தியால் எந்தெந்த முயற்சிகள் மேற்கொள்ள முடியுமோ அந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்தவரின் உடலை எப்படி எடுக்க வேண்டும் என வழிகாட்டும் விதிமுறைகள் உள்ளன. அதேபோல் வெளியே எடுக்கப்பட்ட உடலை எப்படி காண்பிக்க வேண்டும் என சில விதிமுறைகள் உள்ளன. அழுகிய உடலை எப்படி பிரேதப் பரிசோதனை செய்யவேண்டும்? அதற்கான நடைமுறைகள், கைரேகைகள் போன்ற அனைத்து நடவடிக்கைகளையும் மருத்துவர்கள் மேற்கொண்டனர்.
15 ஆண்டுகளில் 10க்கும் மேற்பட்ட பிஞ்சுகளின் உயிரை பறித்த ஆழ்துளைக் கிணறுகள்....
களத்திலிருந்த அனைவரும் எப்படியாவது சுஜித்தைப் பத்திரமாக மீட்க வேண்டும் என்று ஒவ்வொரு நொடியும் போராடினோம். ஆனால் அங்கிருந்த களப்பணியாளர்கள் இவ்வளவு கடுமையாக உழைத்தும் விமர்சிக்கப்படுகிறார்கள். கும்பகோணம் தீவிபத்தின் போதும், இறந்த குழந்தைகளை மீட்கும் பணிகளில் நான் இருந்தேன். அப்போது குழந்தைகளின் சடலங்களை வெளிப்படையாகக் காட்டியதற்காக கடும் விமர்சனங்களைச் சந்தித்திருந்தோம். அதன் பிறகுதான், இறந்தவர்களின் உடலை மீட்கும் வழிமுறையை மத்திய அரசு உருவாக்கியது. சுஜித் விஷயத்திலும் அந்த வழிகாட்டுதலையே நாங்கள் பின்பற்றினோம்.
மீட்புப் பணிகள் நடந்த ஒவ்வொரு நொடியும் சுஜித்தின் பெற்றோர் எங்களுடன் இருந்தனர். மீட்புப் பணி குறித்த அனைத்து விவரங்களையும் அவர்களுக்குத் தெரிவித்துக்கொண்டே இருந்தோம். சுஜித்தை மீட்க இந்திய அளவில் உள்ள அனைத்து உயர்தர இயந்திரங்களையும் நாங்கள் பயன்படுத்தினோம். புவியியல் வல்லுநர்களும் எங்களுடன் இணைந்து செயல்பட்டனர்.
மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது எங்களால் ரன்னிங் கமென்டரி கூறிக்கொண்டிருக்க முடியாது. இதனால்தான் வதந்திகள் பரவி வருகின்றன. மனிதர்களால் முடிந்த அனைத்து முயற்சிகளும் சுஜித் மீட்புப் பணிகளில் முன்னெடுக்கப்பட்டது. அந்த மீட்பு நடவடிக்கைகளுக்கு 11 கோடி ரூபாய் செலவானதாகப் பரவி வரும் தகவல்களும் பொய்யானவை. மீட்புப் பணிகளுக்கு ஆகும் செலவுகளை அரசு எப்போதும் பெரிதாக எடுத்துக்கொள்ளாது. தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து ஆழ்துளைக் கிணறுகளையும் மூட வேண்டும் என்பதுதான் எங்களின் ஒரே கோரிக்கை. மக்களும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும்’ என்றார் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.
மேலும் வானிலை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அவர் கூறுகையில், ‘லட்சத்தீவு, மாலத்தீவு பகுதியில் உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியிருப்பதால் தமிழகத்தின் தென்பகுதியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. உள்மாவட்டங்களில் திண்டுக்கல் போன்ற இடங்களிலும் மழை பெய்கிறது.
எனவே, முதலமைச்சரின் உத்தரவின் அடிப்படையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழையால் பாதிப்பு ஏற்படக்கூடிய தாழ்வான பகுதிகளை கண்டறிந்து, அங்கிருக்கும் மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.’ என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.