சுஜித்... இன்று நம் அனைவரின் வீட்டிலும் தவழாத ஒரு பிள்ளையாகிவிட்டார். ஜாதி, மத பேதமின்றி ஒவ்வொரு பிராத்தனையும் சுஜித் மீண்டும் வர வேண்டும் என்று உருக்கமுடன் வேண்டுகோள் வைத்தும், மண்ணுலகை விட்டு நீங்கியிருக்கிறார். அதுமட்டுமல்ல, நம் அனைவருக்கும் படிப்பினையையும் கற்றுக் கொடுத்து சென்றிருக்கிறார்.
கடந்த அக்.25ம் தேதி சுஜித் குழியில் விழுந்ததில் இருந்து, சடலமாக மீட்கப்பட்டது வரை நடந்தது என்ன என்ற முழு விவரம் இங்கே,
அக்டோபர் 25
அக்.25ம் தேதி மாலை 5:40 மணிக்கு குழந்தை சுஜித் 600 அடி ஆழ்துளை கிணற்றில் விழுகிறான். அவன் விழுந்த ஒரு மணி நேரத்தில் மணப்பாறையில் இருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்துவிட்டனர். அப்போது 22 அடி ஆழத்தில் குழந்தை இருந்தது.
22 அடி ஆழத்தில் குழந்தை இருந்ததை கண்டறிந்த வீரர்கள், ஆழ்துளை கிணற்றின் அருகே பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி குழந்தையை எடுக்க முயற்சி செய்தனர்.
இந்த முயற்சியின் போது, குழந்தை மேலும் மூன்று அடிக்கு உள்ளே சென்றுவிட்டது. அதாவது, இந்த முயற்சியின் போது, குழந்தை 25 அடி ஆழத்திற்கு சென்றுவிட்டது. தவிர, பாறை அதிகம் இருந்ததால் இந்த முயற்சி அத்தோடு கைவிடப்பட்டது.
இதற்கிடையே குழந்தை சிக்கிக் கொண்ட விவரமறிந்து, பல்வேறு பகுதியைச் சேர்ந்த தன்னார்வலர்கள், சுஜித்தை மீட்க வரத் தொடங்கினர்.
மாலை 6:45 மணிக்கு மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு சம்பவ இடத்திற்கு வந்தார்.
இரவு 7 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்த Child Jesus அமைப்பின் டேனியல் குழுவினர் சுருக்கு கயிற்றின் மூலம் குழந்தையை கட்டி தூக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இரவு 7:15 மணிக்கு மாநில அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், என்.நடராஜன், எஸ்.வளர்மதி, மணப்பாறை எம்எல்ஏ சந்திரசேகர், எஸ்பி ஜியாவுல் ஹக் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினார்கள்.
பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, குழந்தையின் இரு கைகளிலும் சுருக்கு போட்டு குழந்தையை மேலே தூக்கிய போது, ஈரப்பதம் காரணமாக ஒரு கையில் இருந்து சுருக்கு அவிழ்ந்தது. இதனால், குழந்தை 36 அடி ஆழத்திற்கு சென்றது.
அடுத்ததாக மதுரையில் இருந்து வந்த மணிகண்டன் குழுவினர், போர்வெல் ரோபோவை பயன்படுத்தி குழந்தையை மீட்க முயன்றனர். ஆனால், ஆழ்துளை கிணற்றில் அகலம் குறுகலாக இருந்ததால் அந்த இயந்திரத்தை பயன்படுத்த முடியவில்லை.
அதன்பிறகு, vacuum பம்பை பயன்படுத்தி குழந்தையை மேலே இழுக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அத்திட்டமும் தோல்வியடைய குழந்தை 60 அடி ஆழத்துக்கு நழுவிச் சென்றது.
நாமக்கல்லில் இருந்து வந்த குழுவினர், பாம்பு பிடிக்கும் கருவியைப் போன்ற ஒரு கருவியை குழிக்குள் செலுத்தி அதன் மூலம் குழந்தையின் கையை பற்றிக் கொண்டு மேலே இழுக்க முயற்சி செய்தனர். ஆனால், அந்த முயற்சியும் தோல்வி அடைந்ததுடன், குழந்தை 70 அடி ஆழத்திற்கு சென்று விட்டது.
அக்டோபர் 26
காலை 9:50 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், "26ம் தேதி விடியற்காலை 5:30 மணியிலிருந்து குழந்தையிடம் எந்த அசைவும் இல்லை. மூச்சு விடும் சப்தத்தை நாங்கள் கேட்கவில்லை. இருப்பினும், எப்படியும் குழந்தையை மீட்டு விடுவோம்" என்றார்.
அன்று மதியம் சம்பவ இடத்திற்கு வந்த தேசிய, மாநில பேரிடர் மீட்புப் படையினர், இதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளையும், அவர்களிடம் இருந்த நவீன உபகரணங்கள் கொண்டும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால், எந்த முயற்சியும் பலனளிக்காததுடன், மாலை 5 மணிக்கு குழந்தை 88 அடி ஆழத்திற்கு சென்றுவிட்டது.
இதையடுத்து, மாலை 5.10 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் இருந்து 3 மீட்டர் தூரம், 1 மீ அகலம், 98 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டி குழந்தையை மீட்க முடிவு எடுக்கப்பட்டது. இந்த பணிக்காக ஒன்ஜிசி நிறுவனத்துக்கு சொந்தமான ரிக் இயந்திரத்தை கொண்டுவர முடிவு செய்யப்பட்டது.
10 அடி அகலமும் , 40 அடி நீளமும் கொண்ட பிரம்மாண்ட லாரியில், திருச்சி லால்குடியில் இருந்து ரிக் இயந்திரம் கொண்டுவர முடிவு எடுக்கப்பட்டு, மாலை 5.30 மணிக்கு அந்த லாரி திருச்சியில் இருந்து புறப்பட்டது.
இரவு 7 மணிக்கு 88 அடியிலிருந்து 100 அடிக்கு குழந்தை நழுவிச் சென்றதால், மேலும் கீழே செல்லாதிருக்க ஏர் லாக் மூலம் அதன் கை இருக பிடிக்கப்பட்டது.
அக்டோபர் 27
அதிகாலை 2:15 மணிக்கு ரிக் இயந்திரம் நடுக்கட்டுப்பட்டி வந்தடைய, காலை 6 மணிக்கு குழி தோண்ட வேண்டிய இடம் வட்டமிடப்பட்டது. காலை 6:15 மணிக்கு, 3 மீட்டருக்கு பதிலாக 2 மீட்டருக்கு துளை போட முடிவு செய்யப்பட்டு, சரியாக 7 மணிக்கு பணிகள் தொடங்கின.
நண்பகல் 12.30 மணி முதல் ஐந்தரை மணி நேரத்திற்கு சுமார் 20 அடிக்கு மட்டுமே குழி தோண்டியது. இதனால், 12:40 மணிக்கு அந்த ரிக் இயந்திரத்தை விட அதிக திறன் கொண்ட மற்றொரு ரிக் இயந்திரம் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டது.
மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், "குழந்தையின் கை தெரிகிறது, ஆனால் அசைவு இல்லை. நேற்றிரவு (அக்.,26) குழந்தையின் உடல் உஷ்ணம் சராசரியாக இருந்ததை அண்ணா பல்கலை., குழுவினர் கண்டறிந்துள்ளனர். மீட்பு பணிகள் தொய்வின்றி நடந்து வருகிறது. பாதுகாப்புடன் குழந்தையை மீட்க வேண்டும் என்பதால் கவனமுடன் செயல்படுகிறோம். சுற்றிலும் இடைவெளி இல்லாமல் குழந்தை சுர்ஜித் சிக்கியுள்ளான்.
ரோபோ கேமரா உள்ளே சென்று குழந்தையின் கையில் வெப்பத்தை பதிவு செய்தது. பண்டிகை என்பதையும் மறந்து இரவு பகலாக இடைவிடாது மீட்புப் பணியில் முழு மூச்சில் ஈடுபட்டுள்ளோம்" என்றார்.
பிறகு, தோண்டப்பட்ட குழிக்குள் மண் சரியாமல் இருக்க இரும்புக் குழாய்கள் பொருத்தப்பட்டன. பிற்பகல் 3.35 மணிக்கு ரிக் இயந்திரம் துளையிட்டுக் கொண்டிருந்த போதே மழை பெய்யத் தொடங்கியது.
அதிக திறன் கொண்ட மற்றொரு ரிக் இயந்திரம் ராமநாதபுரத்தில் இருந்து பிரம்மாண்ட லாரி மூலம் மணிக்கு 30 கி.மீ. வேகத்தில் வந்து கொண்டிருந்தது. பிற்பகல் 4.40 மணிக்கு சம்பவ இடத்திற்கு அந்த இயந்திரம் வந்து சேர்ந்தது.
மாலை 6.30 மணிக்கு மழை வலுத்ததால், ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் செல்லாமல் இருக்க, மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டன.
அக்.27 இரவு 11:30 மணிக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சம்பவ இடத்திற்கு வந்தார்.
அக்டோபர் 28
நள்ளிரவு 12:00 மணிக்கு சக்தி வாய்ந்த ரிக் இயந்திரன் தனது முதற்கட்ட பணியைத் துவக்கியது. 12:15 மணிக்கு சுஜித் பெற்றோரை சந்தித்து துணை முதல்வர் ஓ.பி.எஸ் ஆறுதல் தெரிவித்தார். நான்கு மணி நேர ஆய்வுக்குப் பிறகு நள்ளிரவு 3 மணிக்கு சம்பவ இடத்திலிருந்து அவர் புறப்பட்டார்.
கடினமான பாறைகள் காரணமாக விடியற்காலை 4 மணியளவில், 5 அடி மட்டுமே புதிய இயந்திரம் தோண்டியது. காலை 7.10 மணியளவில், இரண்டு ரிக் இயந்திரங்களை சேர்த்து, மொத்தமாக 40 அடி ஆழமே தோண்டப்பட்டது.
காலை 8:45 மணியளவில், சென்னையில் இருந்து ஆகாஷ் என்ற ட்ரில் பிட் கொண்டு வர திட்டமிடப்பட்டது.
காலை 9:30 மணிக்கு, 'மீட்புப் பணியில் இறுதி முடிவை எடுக்கும் நிலையில் உள்ளோம்' என அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டியளிக்க, காலை 10:30 பேசிய ராதாகிருஷ்ணன், "எக்காரணத்தை முன்னிட்டும் மீட்புப் பணி கைவிடப்படாது" என்றார்.
காலை 11:40 மணிக்கு 2வது ரிக் இயந்திரம் பழுதானதால், பள்ளம் தோண்டும் பணி நிறுத்தப்பட்டது. நண்பகல் 12:35 மணிக்கு பள்ளத்தை ஆய்வு செய்ய, தீயணைப்புப் படை வீரர் ஒருவர் உள்ளே இறங்கினார்.
நண்பகல் 12:55 மணிக்கு 1200 குதிரை திறன் கொண்ட போர்வெல் மூலம், துளையிடும் பணி தொடங்கியது. மாலை 4:40 மணிக்கு போர்வெல் துளைகள் 20 அடியை எட்டிய நிலையில், ரிக் இயந்திரம் தனது பணியைத் தொடங்கியது.
பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் பழனிசாமியிடம் மீட்புப் பணிகள் குறிந்து கேட்டறிந்ததாக ட்வீட் செய்ய, மீட்புப் பணிகள் குறித்து பிரதமருக்கு விளக்கியதாக மாலை 5.20 மணிக்கு முதல்வர் ட்வீட் செய்தார்.
மாலை 5.35 மணிக்கு குழியில் 60 அடிக்கு கீழ் பாறை முடிந்து மண் இருப்பது தெரிய வர, இரவு 7.20 மணிக்கு ரிக் இயந்திரம் மூலம் 63 அடி வரை தோண்டப்பட்டது.
இரவு 9:45 மணிக்கு தோண்டப்பட்ட குழிக்குள் ஆய்வு செய்ய தீயணைப்பு வீரர் அஜித் குமார் ஏணி மூலம் உள்ளே இரங்கி, 9:55 மணிக்கு வெளியே வந்தார். வரும் போது தனது பெல்ட்டில் குழிக்குள் இருந்த பாறையையும் எடுத்து வந்தார்.
அக்.29 அதிகாலை 2.30 மணிக்கு குழந்தை இறந்துவிட்டதாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.