கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ்( வயது 64) மாரடைப்பால் மரணம் அடைந்தார். இன்று காலை நாளிதழ் படித்துக்கொண்டு இருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. குடும்பத்தினர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிகிறது.
கனகராஜுக்கு ரத்தினம் என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். அவரது உடல் சூலூர்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2016 பேரவைத் தேர்தலில் சுமார் 36 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றிப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
எம்.எல்.ஏ கனகராஜ் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
'கட்சியிலும், அரசிலும் பல்வேறு பொறுப்புகளை வகித்த எம்எல்ஏ கனகராஜின் மறைவு அதிமுகவுக்கு பேரிழப்பு' என முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதேபோல், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், "சூலூர் தொகுதி அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் திரு கனகராஜ் அவர்கள் இன்று காலையில் திடீரென்று மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். அவரின் மறைவுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது குடும்பத்தினருக்கும், அ.தி.மு.க தொண்டர்களுக்கும் எனது அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கனகராஜ் மறைவால் சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ.க்களின் காலியிடம் 22-ஆக உயர்ந்துள்ளது.
மேலும் படிக்க - AIADMK, DMK Campaign Live Updates: திமுக, அதிமுக தேர்தல் பிரச்சாரம் லைவ்