கோவையில் உள்ள ஈஷா யோக மையத்திற்கு எதிராக தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கடந்த 2016ஆம் ஆண்டு தாமாக முன்வந்து வழக்கு ஒன்றை விசாரணைக்கு எடுத்தது. அந்த வழக்கில் அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்யக்கோரி ஈஷா யோக மையத்தின் நிர்வாகி கடந்த 2016ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஈஷா யோக மையம் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் "குழந்தைகளின் வாழ்க்கை முறைக்கு தேவையான ஆங்கிலம், கணிதம், அடிப்படை வேதம் ஆகியவற்றை குருகுல கல்வி மூலம் கற்பிப்பதாகவும், அர்பணிப்பு, நல்லொழுக்கம் ஆகியவற்றையும் கற்றுத்தருகிறோம்" இந்நிலையில் எங்கள் மையத்திற்கு எதிரான புகாரில் விசாரணைக்கு ஆஜராகும்படி ஆணையத்திலிருந்து சம்மன் அனுப்பபட்டது.
சம்மன் ரத்துக்கு மறுப்பு
அதை மதித்து குறிப்பிட்ட தேதியில் அனைத்து விவரங்கள் மற்றும் ஆதாரங்களுடன் விசாரணைக்கு ஆஜரான நிலையில், எங்களை விசாரிக்காமல் திருப்பி அனுப்பிவிட்டனர். மேலும் ஆணையத்தின் தரப்பில் ஏற்கனவே ஒரு முடிவை தீர்மானித்துவிட்டு, விசாரணையை முறையாக நடத்தாததால் நீதிமன்றத்தை நாடியுள்ளோம். அதனடிப்படையில் சம்மனை ரத்து செய்ய வேண்டும்" என வாதிடப்பட்டது.
ஆணையம் தரப்பில் குழந்தைகளின் உரிமைகள் மீறப்படுவதாக புகார்கள் வரும்போது அதில் சம்மன் அனுப்பி விசாரிக்க அதிகாரம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
சம்மன் அனுப்ப ஆணையத்துக்கு அதிகாரம் உண்டு
வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், குழந்தைகள் உரிமைகள் பாதிக்கப்படும்போது, கேள்விக்குறியாகும்போதும் அதன் மீதான புகாரில் விசாரணை மேற்கொள்ளவும், தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்கவும், அதில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு சம்மன் அனுப்பி விசாரிக்கவும் ஆணையத்திற்கு அதிகாரம் இருக்கிறது. அதுபோன்று அனுப்பப்படும் சம்மனை எதிர்த்து தொடரப்படும் வழக்குகளை அனுமதிக்க முடியாது. மேலும் சம்மன் அனுப்பும் அமைப்பிற்கு அதிகாரம் இல்லாதபட்சத்தில் தான் சம்மனை ரத்துச் செய்யக்கோரி வழக்கு தொடரமுடியும். இந்த வழக்கில் அப்படி இல்லை.
நியாமான, நேர்மையான, பாரபட்சமற்ற விசாரணை நடைபெறுவதை ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதி, சட்டப்படி அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்ய மறுத்துவிட்டார்.
புதிய சம்மன் அனுப்பு உத்தரவு
அதற்கு பதிலாக புதிய தேதி, நேரத்தை குறிப்பிட்டு மீண்டும் நான்கு வாரங்களில் சம்மன் அனுப்ப ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதி, அதற்கு உரிய ஆதாரங்களுடன் இரண்டு வாரங்களில் விளக்கமளிக்க ஈஷா அறக்கட்டளைக்கு உத்தரவிட்டுள்ளார்.
விளக்கங்களைப் பெற்ற பின் ஈஷா அறக்கட்டளைக்கு உரிய வாய்ப்புகளை வழங்கி விசாரணை நடத்தி எட்டு வாரங்களில் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.