100 பேருக்கு இலவச டிஎன்பிஎஸ்சி பயிற்சி… ரஜினிகாந்த் அறக்கட்டளையில் யாருக்கு முன்னுரிமை - முழு தகவல்
பயிற்சி பெற விரும்புவோர் www.rajinikanthfoundation.org என்ற தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். பயிற்சியில் முன்னுரிமை அளிக்கப்படும் மாணவர்கள் பற்றிய விவரங்களும் இணைக்கப்பட்டுள்ளன.
பயிற்சி பெற விரும்புவோர் www.rajinikanthfoundation.org என்ற தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். பயிற்சியில் முன்னுரிமை அளிக்கப்படும் மாணவர்கள் பற்றிய விவரங்களும் இணைக்கப்பட்டுள்ளன.
நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் தனது 71 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். அப்போது, ரஜினி ரசிகர் மன்ற ஒருங்கிணைப்பாளர் வி.எம்.சுதாகர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், ஏழை மற்றும் விளிம்பு நிலை மக்களின் கல்வியை மேம்படுத்த ரசிகர்கள் மன்றம் சார்பில் ரஜினிகாந்த் அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 100 மாணவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்படும் என கூறியிருந்தார்.
Advertisment
அதன்படி தற்போது , ரஜினி அறக்கட்டளை சார்பில் டிஎன்பிஎஸ்சி பயிற்சிக்காக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த அறக்கட்டளையின் வழிகாட்டுதல் மற்றும் நிர்வாகத்தின் முக்கிய பொறுப்புகளை வழக்கறிஞர் சத்யகுமார் வழிநடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "இந்திய திரைத்துறையின் சூப்பர் ஸ்டார் பத்மபூஷன் ரஜினிகாந்த் அவர்களால் தொடங்கப்பட்ட இந்த அறக்கட்டளை ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்களின் கல்வியை மேம்படுத்தி அதன் மூலம் ஒரு முற்போக்கான சிந்தனை, தலைமைத்துவம், அறிவியல் மனப்பான்மை, ஜனநாயகமயமாக்கப்பட்ட கல்வி மற்றும் நிலையான பொருளாதார அமைப்பு ஆகியவற்றை அமைப்பதற்காக உருவாக்கப்பட்டது.
Advertisment
Advertisements
எங்களுக்கு உலகளாவிய பார்வை இருந்தாலும் எங்களது ஆரம்ப முயற்சிகளை தமிழ்நாட்டில் மட்டுமே எடுக்க விரும்புகிறோம். தமிழ்நாட்டு மக்களின் கருணையும் அன்பும்தான் தனக்கு இவ்வளவு பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது என்று சூப்பர் ஸ்டார் எப்போதும் கூறுவார். எனவே இந்த அறக்கட்டளை தமிழகத்திலிருந்து தொடங்கப்படும்.
அறக்கட்டளை சிறிய ஆரம்பம், முயற்சி, சுயதிருத்தம், பிறகு இதுவே இறுதியில் மகத்தான மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்ற கருத்தை நம்புகிறது. தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் ஆசியுடன், இலவச டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வு பயிற்சிக்கான சூப்பர் 100 பிரிவு பதிவை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இதில் பதிவு செய்ய http://rajinikanthfoundation.org/tnpsc.html என்ற இணையதள முகவரியை பின் தொடரவும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பயிற்சி வகுப்பின் முன்னுரிமை விவரம்
வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள குழந்தைகளுக்கு 20 சதவீதம்,
முதல் தலைமுறை பட்டதாரியாக இருக்கும் மாணவர்களுக்கு 20 சதவீதம்,
குடிசைப் பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு 10 சதவீதம்,
பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட ஒற்றை பெற்றோர் உள்ள குழநதைகளுக்கு 14 சதவீதம்,
3 ஏக்கருக்கும் குறைவான நிலமுள்ள விவசாயிகளின் குழந்தைகளுக்கு 16 சதவீதம்,
பொதுப்பிரிவில் முதல் மதிப்பெண் பெறும் முதல் 10 மாணவ அல்லது மாணவியருக்கு 20 சதவீதம்
ரஜினி அறக்கட்டளையுடன் தொடர்புகொள்ள விரும்புபவர்கள் 044 3556 7696 மற்றும் 98400 59805 ஆகிய எண்களிலும், Tycoon House of Justice, No.2, First Floor,4th Main Road, R.A.Puram, Chennai 28 என்ற முகவரியிலும் அணுகலாம்.
கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக குரூப் 2, குரூப் 4 மற்றும் குரூப் 2A நடைபெறாத நிலையில், 2022 ஆம் ஆண்டில் பிப்ரவரி மாதம் குரூப் 2 தேர்வும் மார்ச் மாதம் குரூப் 4 தேர்வும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil