தமிழக கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 11ம் வகுப்பில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு, மூன்று வாரங்களில் துணைத்தேர்வு நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் படிக்கும் 11-ம் வகுப்பு மாணவர்கள், தேர்வில் ஒரு பாடத்தில் தோல்வியடைந்தால் துணைத் தேர்வு எழுத அனுமதிப்பதாகவும், ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்தால் துணைத் தேர்வு எழுத அனுமதிப்பதில்லை என்றும், மாணவர்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதி தண்டபாணி விசாரித்தபோது, ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்த மாணவி ஒருவருக்கு, 2018-ல் துணைத் தேர்வு எழுத உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக மாணவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
ஆனால் ஐகோர்ட்டு உத்தரவில் குறிப்பிட்ட அந்த மாணவி வேறு பள்ளியில் சேர மாற்றுச் சான்று பெறுவதற்காகவே துணைத் தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டதாகவும், இந்த வழக்கிற்கு அந்த உத்தரவு பொருந்தாது என்றும் தெரிவித்தனர். மேலும், ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்தவர்களுக்கு துணைத்தேர்வு எழுத அனுமதியில்லை என்று விதிகள் உள்ளதாக கேந்திரிய வித்யாலயா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் கேந்திரிய வித்யாலயாவில் 11-ம் வகுப்பில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்தவர்களுக்கு மூன்று வாரங்களில் துணைத்தேர்வு நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil