அழகிரிக்கு பெருகும் ஆதரவு : திமுகவில் தலைமை தாங்க வருமாறு நெல்லையில் போஸ்டர்

திமுகவுக்கு தலைமை தாங்க வருமாறு மு.க.அழகிரிக்கு அழைப்பு விடுக்கும் போஸ்டர் நெல்லை அருகே ஒட்டப்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மு.க.அழகிரி, தயாநிதி மாறன் ஆகியோரை திமுகவுக்கு தலைமை தாங்க வருமாறு அழைப்பு விடுக்கும் போஸ்டர் நெல்லை அருகே ஒட்டப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை மேற்கு மாவட்டம் பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த, திமுக பிரமுகர், ஒன்றிய துணைத் தலைவராகவும் இருந்த சுதன் என்பவரின் புகைப்படத்துடன் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.

சென்னை ஆர்.கே.நகரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக படுதோல்வியை அடைந்து டெப்பாசிட்டை இழந்தது. இது திமுக தொண்டர்கள் மத்தியிலும், மூத்த மாவட்ட செயலாளர்கள் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தோல்வியை அடுத்து, பத்துக்கும் மேற்பட்ட மூத்த மாவட்ட செயலாளர்கள், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரியுடன் போனில் தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர்.

அவரும் பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்கும் போது, மு.க.ஸ்டாலின் கட்சிக்கு தலைமை தாங்கும் வரையில் திமுக தேர்தலில் வெற்றி பெற முடியாது என்று சொன்னார். இதனால், அவருக்கு தொண்டர்கள் மத்தியிலும் ஆதரவு பெருகத்தொடங்கியுள்ளது.

திமுக ஆட்சியில் இருக்கும் போது, 2001ம் ஆண்டு ஸ்டாலின் தலைமையில் தேர்தல் வியூகம் அமைக்கப்பட்டது. அந்த தேர்தலில் ஜாதி கட்சிகளுடன் கூட்டணி அமைத்தார், ஸ்டாலின். அந்த தேர்தலில் திமுக படுதோல்வியை சந்தித்தது. முரசொலி மாறன் கூட அந்த தேர்தலின் போது அதிருப்தியில் ஒதுங்கிக் கொண்டார்.

கருணாநிதியின் வியூகத்தால் 2006ம் ஆண்டு மீண்டும் திமுக ஆட்சியை கைப்பற்றியது. 2011ம் ஆண்டு தேர்தலின் போது ஸ்டாலினிடம் தேர்தல் வியூகம் அமைக்கும் பணியை கருணாநிதி ஒப்படைத்தார். அந்த தேர்தலிலும் திமுக தோல்வியை தழுவியது. ஆட்சியை இழந்தது. அதன் பின்னர் வந்த உள்ளாட்சி தேர்தலிலும் ஸ்டாலினே வியூகம் அமைத்தார். வெற்றி பெற முடியாமல் போனது. 2009ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் ஸ்டாலினே வேட்பாளர்களை தேர்வு செய்தார். கட்சிக்கு சற்றும் தொடர்பு இல்லாத சிலரை வேட்பாளராக போட்டார். அது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. தேர்தலில் படுதோல்வியை சந்தித்தார். ஒரு இடத்தில் கூட திமுகவால் ஜெயிக்க முடியவில்லை.

2016ம் ஆண்டு தேர்தலில் கருணாநிதி வயது மூப்பு காரணமாக, ஸ்டாலினிடமே தேர்தல் வியூகத்தை அமைக்கக் கொடுத்தார். அந்த தேர்தலிலும் திமுக ஆட்சியை பிடிக்க முடியவில்லை. இந்த தேர்தல்களின் போதெல்லாம், ஜெயலலிதா என்ற பெரிய ஆளுமை எதிர் தரப்பில் இருந்தது. ஸ்டாலினால் ஜெயிக்க முடியாமல் போனது. இப்போது, ஜெயலலிதா மறைந்துவிட்டார். அந்த தொகுதிக்கான தேர்தலில் திமுக டெப்பாசிட்டை இழந்துள்ளது கட்சியினருக்கு பெரிய அதிர்ச்சி.

ஜெயலலிதா உயிருடன் இருந்த போது அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சிம்லா முத்துச்சோழன் சுமார் 57 ஆயிரம் ஓட்டுக்களை வாங்கினார். ஆனால் அதைக் கூட ஜெயலலிதா இல்லாத போது டிடிவி.தினகரனிடம் இழந்துவிட்டது திமுக. கட்சியை ஜெயிக்க வைக்கக் கூடிய தலைவராக ஸ்டாலின் இல்லை என்று கட்சியினர் நம்புகின்றனர். எனவேதான், அவர்கள் அழகிரியை தலைமை தாங்க வர வேண்டும் என போஸ்டர் ஒட்டுகிறார்கள் என்றார், கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர்.

நெல்லையில் ஒட்டப்பட்ட இந்த போஸ்டர் என்பது ஆரம்பம்தான். இனி தொடர்ந்து இது போன்ற போஸ்டர்கள் ஏராளமாக வர வாய்ப்பு இருக்கிறது. ஸ்டாலின் தலைமைக்கு இது பெரிய சவாலை ஏற்படுத்தும் என்று அந்த தலைவர் தெரிவித்தார்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close