மாநில அரசு அனுப்பும் மசோதாக்கள் தொடர்பான விவகாரத்தில், ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் ஆர்.என். ரவி காலம் தாழ்த்துவதாகவும், இதனால் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கிடப்பில் இருப்பதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. இது குறித்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த ரிட் மனுக்களின் விசாரணை இன்று நடைபெற்றது.
இந்த வழக்கு இன்றைய தினம் (பிப் 7) நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா, ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆளுநர் தரப்புக்கு நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தனர்.
குறிப்பாக, "எந்த பதிலும் அளிக்காமல் மசோதாக்களை மட்டும் ஆளுநர் திருப்பி அனுப்பினால், அவர் மனதில் என்ன இருக்கிறது என்பது எப்படி தெரியும்? குறிப்பிட்ட மசோதாவில் என்ன மாற்றங்கள் மேற்கொள்ள வேண்டும் என்பதை கூறவில்லை என்றால், அரசுக்கு எப்படி தெரியும்? குறிப்பிட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கூடாது என ஆளுநருக்கு எப்படி உணர்ந்தது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த ஆளுநர் தரப்பு வழக்கறிஞர், "துணைவேந்தர் நியமனத்தில் தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடைமுறை, மத்திய சட்ட விதிமுறைகளுக்கு எதிராக உள்ளது. பின்னர் எப்படி ஆளுநர் ஒப்புதல் அளிப்பார்?" எனக் கூறினார்.
"குறிப்பிட்ட மசோதா சட்டத்திற்கு எதிராக இருந்தால் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? மாநில அரசு எப்படி செயல்படும் என்று நினைக்கிறீர்கள்? மாநில அரசுக்கு, ஆளுநர் முட்டுக்கட்டையாக செயல்படுகிறார். மசோதா விவகாரத்தில் ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்கக் கூடாது" என நீதிபதிகள் வலியுறுத்தினர்.
இந்நிலையில், "பல்கலைக்கழக செயல்பாடுகள் குறித்து ஆளுநர் தலைமையில் நடைபெற இருந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டாம் என சில துணைவேந்தர்களை அரசு அணுகியது" என ஆளுநர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. மேலும், "பல்கலைக்கழக மானியக் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள துணைவேந்தர்களின் பொறுப்பை மாநில அரசு ஆக்கிரமிக்க முயல்கிறது" எனறும் தெரிவிக்கப்பட்டது.
குறிப்பாக, "சில முரணான காரணங்களுக்காக ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் இருப்பார் என்றால், அரசு மற்றும் ஆளுநர் என இரண்டு தரப்பும் இணைந்து முடிவெடுக்க குடியரசு தலைவருக்கு அனுப்பலாம். இதன் மீது முடிவெடுக்க குடியரசு தலைவருக்கு அனுப்புங்கள் என்று மாநில அரசே, ஆளுநரை கேட்க வைக்கலாம். அதன்படி, இதில் மாநில உரிமைகளை பறிப்பதாக கருத முடியாது" என ஆளுநர் தரப்பில் இருந்து வாதிடப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், கடந்த 2023-ஆம் ஆண்டு மசோதாக்கள் குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்ட பின்னர், தற்போது வரை என்ன நடவடிக்கைகளை ஆளுநர் மேற்கொண்டார்? 2 ஆண்டுகளாக மசோதாக்கள் அவரிடம் உள்ளதா? மாநில அரசுக்கும் அவருக்கும் இடையே தகவல் பரிமாற்றம் இருந்ததா? எனக் கேள்வி எழுப்பினர். மேலும், கிடப்பில் உள்ள மசோதாக்களின் நிலை என்ன என்றும் பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் கேட்டனர்.