v-senthil-balaji | supreme-court-of-india: சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுவரும் நிலையில், நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே 2 முறை மனு தாக்கல் செய்தார். ஜூன் 16 மற்றும் செப்டம்பர் 20ம் தேதி அந்த மனுக்களை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி தள்ளுபடி செய்தார். இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை கடந்த 19ஆம் தேதி விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் மருத்துவ காரணங்களை காட்டியும், சாட்சிகளை கலைக்கும் வாய்ப்பும் உள்ளதாக கூறி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். இதனை எதிர்த்து தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்தார்.
மறுப்பு
இந்த மேல்முறையீட்டு மனு அக்டோபர் 30ம் தேதி நீதிபதிகள் அனிருதா போஸ், பேலா. எம். திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சொலிசிட்டர் ஜெனரல் தரப்பில் மனுவை ஒத்திவைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனால் நீதிபதிகள் மனு மீதான விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைக்க முடிவு செய்தனர்.
ஆனால், அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் கோருவதாகவும், அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழக்கை நவம்பர் 20ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
ஒத்திவைப்பு
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் மேல்முறையீடு மனு இன்று (திங்கள்கிழமை) விசாரணைக்கு வந்தது. வழக்கை நீதிபதிகள் பேலா எம் திரிவேதி, சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, "நேற்றும் செந்தில் பாலாஜி மருத்துவர்கள் குழுவால் பரிசோதிக்கப்பட்டார். அவருக்கு ஏற்கனவே பைபாஸ் அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. இது மருத்துவ ஜாமீன் மனு. சமீபத்திய அறிக்கைகளைக் காண்பிக்கிறேன்." என்று கூறினார்.
தொடர்ந்து செந்தில் பாலாஜிக்கு மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறிய வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி எம்.ஆர்.ஐ அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். அப்போது இடைமறித்த நீதிபதி திரிவேதி பக்கவாதம் ஏற்பட்டதற்கான அறிக்கைகள் எங்கே? என்றும், எம்.ஆர்.ஐ எப்போது செய்யப்பட்டது? என்றும் கேள்வி எழுப்பினார். அத்துடன் இது சமீபத்தில் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை என்றும் கூறினார்.
மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்தி "செந்தில் பாலாஜிக்கு மூளைச்சோர்வு, இதய வால்வு பிரச்னை, பித்தப்பை பிரச்சனைகள் உள்ளது." என்று தெரிவித்த நிலையில், அதற்கு மத்திய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "இவை பழைய, நாள்பட்ட பிரச்சினைகள்" என்று வாதிட்டார்.
அப்போது மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, "ஒரு முக்கிய புள்ளி உள்ளது. நீங்கள் எங்காவது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் மருத்துவ ஜாமீன் பெற முடியாது என்று உயர்நீதிமன்றம் கூறுகிறது. அது தவறு. சிகிச்சை பெற அவருக்கு உரிமை இல்லையா?. அவருக்கு நிலையான மருத்துவ கண்காணிப்பு தேவை." என்று தெரிவித்தார்.
முடிவில், எம்.ஆர்.ஐ மருத்துவ அறிக்கைகளை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி திரிவேதி, வழக்கு விசாரணையை நவம்பர் 28-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.