தமிழ்நாடு அரசு மற்றும் ஆளுநர் ஆர்.என். ரவி இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், இல்லையென்றால் இந்த விவகாரத்தை தாங்கள் தீர்த்து வைப்போம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என். ரவி காலம் தாழ்த்துவதாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில், துணை வேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர் ஆர்.என். ரவியின் குறுக்கீடு தொடர்பாக புதிய கூடுதல் மனுவையும், தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ளது. அதனடிப்படையில், சென்னை பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், காமராஜர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 6 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை நியமிக்க தமிழ்நாடு அரசு குழு அமைத்திருந்தது.
ஆனால், இந்த விவகாரத்தில் ஆளுநரின் குறுக்கீடு அதிகமாக இருப்பதாக தமிழ்நாடு அரசு குற்றம்சாட்டியது. குறிப்பாக, ஆளுநர் தரப்பில் இருந்தும் ஒரு குழு அமைத்து உத்தரவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த விசாரணையின் போது மத்திய அரசு தரப்பில் இருந்து ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும் என தெரிவித்தார். இதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு, துணை வேந்தர் நியமனத்திலும், மசோதாக்கள் தாமதப்படுத்துவதிலும் கடந்த ஆண்டு நிலைமையே தொடர்கிறதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ஆளுநர் நிலைப்பாட்டில் எந்த வித மாற்றமும் இல்லை என்றும், இதே நிலை தான் தொடர்கிறது என்றும் தமிழ்நாடு வழக்கறிஞர்கள் பதிலளித்தனர்.
மேலும், பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயற்சித்து வருவதாக ஆளுநர் தரப்பில் ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர் கூறினார். அப்போது குறிக்கிட்ட நீதிபதிகள், பிரச்சனைகளை தீர்க்க முயற்சிக்காவிட்டால், நாங்களே தீர்க்க முயற்சிப்போம் என கூறினர். மேலும், வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்தி வைக்க முடியாது என்றும், அடுத்த முறை வழக்கின் இறுதி விசாரணை நடைபெறும் என்று கூறினர்.