தமிழ்நாடு போக்குவரத்துச் சட்டப்படி, தமிழ்நாடு (TN) பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள்தான் தமிழ்நாட்டிற்குள் தொடர்ந்து இயக்கப்பட வேண்டும். ஆனால், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா என வெளிமாநிலங்களின் பதிவெண் கொண்டு பேருந்துகளை தமிழ்நாட்டில் இயக்கி வருகின்றனர்.
இந்த விதிமீறலால் தமிழ்நாடு அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படுகிறது. ஆகவே, வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்கள் இயங்க அனுமதி இல்லை என்று தமிழக போக்குவரத்துத் துறை தெரிவித்தது.
இதற்கு எதிராக ஆம்னி உரிமையாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவில், “தமிழக அரசின் உத்தரவால் வெளிமாநில ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்து இருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், “தமிழகத்தில் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயக்குவதை தடுக்க கூடாது” என தமிழ்நாடு அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும், ரிட் மனு தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில், “அகில இந்திய சுற்றுலா அனுமதி பெற்றிருந்தால், பிற மாநிலங்களில் பதிவுசெய்யப்பட்ட பேருந்துகளை தமிழக அதிகாரிகள் தடுக்கக் கூடாது என்றும் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது” எனக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“