தமிழகத்தில் தூத்துக்குடியில் மூடப்பட்ட ஆக்சிஜன் ஆலையை இயக்குவதற்கு வேதாந்தா நிறுவனத்துக்கு செவ்வாய்க்கிழமை அனுமதி அளித்த உச்ச நீதிமன்றம், ஆக்சிஜனுக்கான தேசிய தேவையை கருத்தில்கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எல்.நாகேஸ்வர ராவ் மற்றும் எஸ்.ரவீந்திர பாட் ஆகியோர் அடங்கிய அமர்வு, வேதாந்தா நிறுவனம் இந்த உத்தரவின்கீழ் அதன் செம்பு உருக்கும் ஆலைக்குள் நுழைந்து செயல்பட அனுமதிக்கப்படாது என்று தெரிவித்தனர்.
நாடு ஒரு தேசிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதால் வேதாந்தா நிறுவனம் ஆக்சிஜனை உருவாக்குவது குறித்து எந்தவிதமான அரசியல் சச்சரவும் இருக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. வேதாந்தா நிறுவனம் தனது ஆக்சிஜன் ஆலையை இயக்க அனுமதிக்கும் உத்தரவு மூலம் தனக்கு சாதகமாக எந்த பங்குகளையும் உருவாக்காது என்று என்று தெரிவித்தது.
வேதாந்தா நிறுவனம் ஆக்சிஜன் ஆலையில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர், தூத்துக்குடி காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் அடங்கிய ஒரு குழுவை அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தமிழக் அரசைக் கேட்டுக்கொண்டது.
மருத்துவ ஆக்சிஜனை உற்பத்தி செய்வதற்காக 4 மாத காலத்திற்கு தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் செம்பு உருக்கு ஆலையை மீண்டும் திறக்க தமிழக அரசு முடிவு செய்த ஒரு நாள் கழித்து உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு வந்துள்ளது.
இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “தூத்துக்குடியில் உள்ள செம்பு உருக்கு ஆலை ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்காக 4 மாத காலத்திற்கு மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும். எந்த சூழ்நிலையிலும் செம்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பிற ஆலைகளைத் திறக்கவோ அல்லது இயக்கவோ வேதாந்தா நிறுவனம் அனுமதிக்கப்படாது. ஆக்சிஜன் தேவையின் அடிப்படையில் ஆக்சிஜன் ஆலையை இயக்குகிற காலம் நீட்டிக்கப்படலாம். ஆக்சிஜன் ஆலைகளுக்கான மின்சாரம் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அரசாங்கத்தால் குறைக்கப்படும்” என்று கூறியிருந்தார்.
சுற்றுச்சூழல் விதிமீறல் தொடர்பாக தூத்துக்குடியில் உள்ள செம்பு உருக்கு ஆலை 2018-ல் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் மூடப்பட்டது. மே 22, 2018 அன்று, வேதாந்தா நிறுவனத்தால் புதிய செம்பு உருக்கு ஆலையை கட்டுவதற்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள் மீது மாநில காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்ட்ல் 13 பேர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”