ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தி.மு.க கூட்டணி கட்சிகள் சார்பில் காங்கிரஸைச் சேர்ந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அ.ம.மு.க, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளரை அறிவித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.கவில் குழப்பம் நீடித்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் இரு வேறு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வேட்பாளரை அ.தி.மு.க சார்பில் இருவரும் அறிவித்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன், கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் என்ற முறையில் எனது கையொப்பத்துடன் அனுப்பக் கூடிய வேட்பாளரின் பெயரை தேர்தல் ஆணையம் ஏற்க உத்தரவிடக் கோரி எடப்பாடி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி, ஹிருஷிகேஷ் ராய் ஆகியோர் முன் நேற்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது, ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வேட்பாளரை அ.தி.மு.க பொதுக்குழுவில் முடிவு செய்யலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதன் படி வேட்பாளர் தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் குறித்து நீதிபதிகள் விளக்கம் அளித்தனர்.
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளரை அ.தி.மு.க பொதுக்குழு மூலம் முடிவு செய்யலாம். பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவு அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் மூலம்
தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட வேண்டும். - வேட்பாளரை தேர்வு செய்யும் பொதுக்குழு முடிவுக்கு கையெழுத்து பெற ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு அனுப்பலாம். பொதுக்குழு முடிவிற்கு கையெழுத்திடுவது குறித்து ஓ.பன்னீர்செல்வம் முடிவெடுக்கலாம். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது முக்கிய 2 ஆதரவாளர்கள் பொதுக்குழுவில் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம்.
- தேர்தலுக்கான கால அவகாசம் கருதி வேட்பாளர் தேர்வுக்கான வாக்குகளை அ.தி.மு.க பொதுக்குழு உறுப்பினர்களிடம் இருந்து கடிதம் மூலம் பெறலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.