மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பிய சம்மனுக்கு இடைக்கால தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான அமலாக்கத் துறையின் மேல்முறையீடு மனு மீதான விசாரணையில், நாடாளுமன்றத்தின் சட்டத்தை தமிழ்நாடு அரசு மதிக்க வேண்டாமா? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் உள்ள முக்கியமான மணல் குவாரிகளில் அரசு நிர்ணயம் செய்த அளவைவிட கூடுதலாக மணல் அள்ளி சட்டவிரோதமாக விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் கிடைத்த வருமானம் மூலம் சட்டவிரோத பணப் பரிமாற்றங்கள் நடந்ததாகவும் புகார் எழுந்தது.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த அமலாக்கத் துறை திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பியது. இதை ரத்து செய்ய கோரி தமிழக அரசின் பொதுத்துறை, நீர்வளத்துறை செயலர்கள், திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் மாவட்ட ஆட்சியர்கள் இணைந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அமலாக்கத்துறை சம்மனுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. இந்த தடை உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை கடந்த 23 ஆம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு எதிராக மாவட்ட ஆட்சியர்கள் எப்படி ரிட் மனு தாக்கல் செய்ய முடியும், அவர்கள் விசாரணை அமைப்புகளுக்கு ஒத்துழைக்க வேண்டாமா என்று கேள்வி எழுப்பியது. இதற்கு தமிழக அரசின் சார்பில் பதில் அளிக்க ஒரு வாரம் அவகாசம் கேட்கப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை 26 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் பெலா எம் திரிவேதி மற்றும் பங்கஜ் மித்தல் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத் துறைக்கு எதிராக எப்படி மாவட்ட ஆட்சியர்கள் ரிட் மனு தாக்கல் செய்ய முடியும்? நாடாளுமன்றத்தின் சட்டத்தை தமிழ்நாடு அரசு மதிக்க வேண்டாமா? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
இதற்கு பதிலளித்த தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், “மணல் விற்பனை உள்ளிட்ட விவரங்களை அமலாக்கத் துறை கேட்டதால் தமிழ்நாடு அரசு ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசின் ஒரு பகுதி மாவட்ட ஆட்சியாளர்கள் ரிட் மனு தாக்கல் செய்ய முடியும்.
சட்டவிரோத மணல் விற்பனையை விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் இல்லாத போது எப்படி சம்மன் அனுப்ப முடியும்? சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பாக எந்த வழக்கும் பதிவு செய்யாத போது அமலாக்கத் துறை பண மோசடி தடுப்பு சட்டத்தின் எந்த பிரிவில் தகவல் கோர முடியும்? என தமிழ்நாடு அரசு பதில் அளித்தது.
இதனையடுத்து, அமலாக்கத் துறைக்கு உதவினால் தமிழக அரசுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், “நாடாளுமன்றத்தின் சட்டத்தை தமிழ்நாடு அரசு மதிக்க வேண்டாமா? சட்ட விரோத மணல் விற்பனையில் ஏதேனும் குற்றம் நடந்துள்ளதா என்பதை அறிய அமலாக்கத் துறைக்கு மாவட்ட ஆட்சியர்கள் உதவ வேண்டும்” என்று அறிவுறுத்தினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“