அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கு விசாரணையின் போது, அவர் பதவியில் தொடர வேண்டும் என்று விரும்புகிறாரா? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கிய ஜாமின் தீர்ப்பை திரும்பப் பெறக் கோரி, போக்குவரத்து துறையில் லஞ்சம் பெற்ற வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெறுகிறது.
இன்று நடைபெற்ற விசாரணையின் போது, அமைச்சர் தரப்பிற்கும், தமிழ்நாடு அரசு தரப்பிற்கும் சரமாரியான கேள்விகளை நீதிபதிகள் முன்வைத்துள்ளனர். குறிப்பாக, இந்த வழக்கில் எத்தனை அரசு ஊழியர்கள் சாட்சியங்களாக உள்ளனர்? என்று கேள்வி எழுப்பினர். அப்போது, 200-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் இந்த வழக்கில் சாட்சியங்களாக இருப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைக் கேட்ட நீதிபதிகள், வேலைவாய்ப்பு தொடர்பாக இத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தனை அரசு ஊழியர்கள் சாட்சியங்களாக இருக்கும் போது, செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வது எப்படி சரியாக இருக்கும் எனக் கேள்வி எழுப்பினர். மேலும், செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதற்கு விரும்புகிறாரா? இல்லையா? என்பதை தெரிவிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
குறிப்பாக, அமைச்சராவதில் செந்தில் பாலாஜிக்கு என்ன அவசரம் இருக்கிறது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இது போன்ற பதவியில் செந்தில் பாலாஜி தொடர்ந்தால், 200-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் எப்படி சாட்சியம் அளிப்பார்கள் என்ற கேள்வியையும் நீதிமன்றம் முன்வைத்துள்ளது. இதனிடையே, செந்தில் பாலாஜி அமைச்சராவதற்கு முன்பு வரை, தடயவியல் துறை அதிகாரி ஒருவர் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சி அளித்ததாகவும், செந்தில் பாலாஜி அமைச்சரான பின்னர் அந்நபர் சாட்சி அளிக்கவில்லை எனவும் அமலாக்கத்துறை வாதிட்டது.
இதன் தொடர்ச்சியாக, வழக்கின் விசாரணையை மார்ச் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதற்குள் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் தொடர விரும்புகிறாரா என்பதை கேட்டு தெரிவிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.