உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றிய நீதிபதி சஞ்சீவ் கண்ணா கடந்த 13 ஆம் தேதி ஓய்வு பெற்றார். இதேபோல், உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளில் ஒருவரான அபய் எஸ்.ஓகா கடந்த 24 ஆம் தேதி ஓய்வு பெற்றார். இதனால் நிர்ணயம் செய்யப்பட்ட உச்ச நீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 34-ல் இருந்து 31-ஆக குறைந்துள்ளது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான உச்ச நீதிமன்றம் கொலிஜியம் நேற்று திங்கள்கிழமை கூடி மூன்று மாநில உயர்நீதிமன்றங்களில் இருந்து மூன்று நீதிபதிகளை உச்ச நீதிமன்றத்திற்கு நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
அதில், ‘‘கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.அஞ்சாரியா, ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி விஜய் பிஷ்னோய் மற்றும் மும்பை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி ஏ.எஸ் சந்துர்கர் உள்ளிட்ட மூவரையும் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இவை ஏற்கப்படும் பட்சத்தில் உச்ச நீதிமன்றம் நிர்ணயம் செய்யப்பட்ட முழு நீதிபதிகளுடன் செயல்படும்.
இதனிடையே, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீராமை ராஜஸ்தானுக்கு மாற்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீவத்சவாவை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரைத்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் உள்பட 4 உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளை இடமாற்றம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் 22 பேரை பணியிடமாற்றம் செய்யவும் உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.