கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட அனுமதி கிடையாது: உச்சநீதிமன்றம் உத்தரவு!

மத்திய அரசுக்கு 2022 ஆம் ஆண்டு வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டார்

கூடங்குளம் அணு உலை செயல்பாட்டிற்கு தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் செயல்பட்டு வரும் அணுமின் நிலையத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் சுந்தரராஜன் உள்ளிட்டோர் இந்த வழக்கை தொடர்ந்திருந்தனர். இந்த மனுவில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் போதிய பாதுகாப்பு வசதிகள் பின்பற்றப்படவில்லை என்றும் அணு கழிவுகளை சேகரிக்க போதிய வசதிகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் கூறியிருந்தனர்.

எனவே பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும் வரை கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட உத்தரவிட வேண்டும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. நேற்றைய தினம் (2.7.18) தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது.

அப்போது, அணுக்கழிவுகள் சேமிப்பு கிடங்கை உருவாக்க மத்திய அரசுக்கு 2022 ஆம் ஆண்டு வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டார்.அத்துடன் கிடங்குகள் அமைக்கும் வரை அணுஉலை செயல்பாட்டை நிறுத்தி வைக்கும் கோரிக்கையை ஏற்க முடியாது என்றும் நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

×Close
×Close