தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 27, 30 தேதிகளில் நடைபெற உள்ள நிலையில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து விளக்கம் கேட்டு திமுக தரப்பில் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் மீண்டும் தலையிட விரும்பவில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த 11 ஆம் தேதி பிறப்பித்த உத்தரவு தொடர்பாக திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, “உச்ச நீதிமன்ற உத்தரவில் உள்ள irrespective (பொறுப்பற்ற) என்ற வார்த்தை தொடர்பாக விளக்கம் வேண்டும். ஏனென்றால், உச்ச நீதிமன்றம் கடந்த 11 ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் 2011 சென்சஸ் படி தேர்தல் நடத்தவேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதே வேளையில் தொகுதி மறுவரையறை, இடஒதுக்கீடு தொடர்பான எண்ணிக்கை குறித்து கணக்கில் கொள்ள தேவையில்லை என கூறப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
திமுக தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதத்தின்போது குறுக்கிட்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, திமுகவின் கோரிக்கையை நிராகரிப்பதாக தெரிவித்தார். மேலும், இந்த விவகாரத்தில் மீண்டும் தலையிட விரும்பவில்லை எனவும் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவில் தெளிவுபடுத்த ஒன்றும் இல்லை என்று தெரிவித்தார்.
இந்த வழக்கில், தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி திமுக அரசியல் விளையாட்டு விளையாடுகிறது எனவும் அவர்கள் தேர்தலை நிறுத்த முற்படுகிறார்கள் எனவும் வாதிட்டார். அதை அப்போது நம்பவில்லை. ஆனால், தற்போது அவருடைய வாதத்தை நம்பவேண்டிய சூழல் உருவாகிவிடுமோ என நீதிபதி கருத்து தெரிவித்தார்.
தமிழக உள்ளாட்சி தேர்தல் குறித்து திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு, இந்த விவகாரத்தில் மீண்டும் தலையிட விரும்பவில்லை என்று கூறியிருப்பதன் மூலம் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு எந்த தடையும் இல்லை என்பது தெளிவாகியுள்ளது.