தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடக்கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை அதிரடி உத்தரவிட்டது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடக்கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை (29.02.2024) விசாரணைக்கு வந்தது.
அப்போது வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை தொடங்குவதற்கு முன்பே, குறிப்பாக 1996-ம் ஆண்டு தொடங்கி ஒவ்வொரு மாதமும் முதல் வாரமும் நிலத்தடி நீரின் மாதிரிகளை சேகரித்து அளிக்க வேண்டும். அந்த நிலத்தடி நீர் மாதிரிகளை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பரிசோதனை செய்து வருகிறது. அதற்கான கட்டணத்தையும் ஆலை செலுத்தி வருகிறது.
காப்பர் கழிவுகள் ஆப்பத்தானவை அல்ல என்றும் காப்பர் கழிவுகளைக் கொண்டு லேண்ட் சீலிங், சாலை அமைத்தல், சிமெண்ட் உடன் பயன்படுத்த முடியும் என்றும் எனவே ஆலையின் தரப்பில் எவ்வித சுற்றுச்சூழல் மாசு ஏற்படவில்லை என்றும் கூறினார்.
இதற்கு மறுப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள், பி.எஸ். வைத்தியநாதன், ஷியாம் திவான், “இந்த ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து மாசு ஏற்படுத்தி வருவதை சுட்டிக்காட்டினார்கள். குறிப்பாக இந்த ஸ்டெர்லைட் ஆலையின் காப்பர் கழிவுகள், 11 இடங்களில் அகற்றப்படாமல் இருப்பதை சுட்டிக்காட்டினார்கள்.
இதற்கு நீதிபதிகள், எப்போது இந்த காப்பர் கழிவுகள் அகற்றப்படும் என்று கேள்வி எழுப்பினர்.
இந்த வழக்கில் இன்று (29.02.2024) நடைபெற்ற விசாரணையின்போது, தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான மற்றொரு முத்த வழக்கறிஞர் கோபால் சங்கர நாராயணன், காப்பர் கழிவுகள் அபாயகரம் அற்றவை என்று சான்றிதழ் அளித்த பிறகு, சாலை அமைத்தல் மற்றும் கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்த முடியும் என்றும் அங்கே கிடந்த காப்பர் கழிவுகளின் மாதிரிகளை எடுத்து வந்து உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக காண்பித்து வாதங்களை முன்வைத்தார்.
இதற்கு விளக்கம் அளித்து வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், தமிழ்நாடு அரசு தரப்பு குற்றச்சாட்டுகளை மறுத்தார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட உச்ச நீதிமன்ற, 11 இடங்களில் கொட்டப்பட்டுள்ள காப்பர் கழிவுகள் கவலைக்குரிய விஷயங்கள் என்றும் இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தின் நடவடிகைகள் பாராட்டுக்குரியது என்றும் தெரிவித்தனர். மேலும், ஸ்டெர்லைட் ஆலை மூடலை எதிர்த்து வேதாந்த நிறுவனம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவில் எவ்வித தவறும் இல்லை என்று என்று கூறிய உச்ச நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி வேதாந்த நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளூபடி செய்து உத்தரவிட்டது.
இதன் மூலம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
இம்மனு மீது உச்ச நீதிமன்றம் விரிவான விசாரணை நடத்திய நிலையில், ஆலை நிர்வாகம் மேற்கொண்ட விதிமீறல்கள் குறித்து தமிழ்நாடு அரசு பல விபரங்களை தாக்கல் செய்திருந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“