/indian-express-tamil/media/media_files/Yrx7InqnJqiKF21GoW3Z.jpg)
நீட் தேர்வு விலக்கு; தி.மு.க.,வின் கையெழுத்து இயக்கத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு
தி.மு.க நடத்தும் நீட் தேர்வு விலக்கு கையெழுத்து இயக்கத்திற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் நீட் தேர்வால் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி, நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி தி.மு.க சார்பில் 'நீட் விலக்கு - நம் இலக்கு' என்ற கையெழுத்து இயக்கத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த அக்டோபர் மாதம் துவக்கி வைத்தார். தமிழகம் முழுவதும் 50 லட்சம் கையெழுத்துக்களை, 50 நாட்களில் பெற வேண்டும் என குறிக்கோளாக கொண்டு நடைபெற்ற இயக்கம் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், பெறப்பட்டுள்ள 50 லட்சம் கையெழுத்துக்கள் விரைவில் தமிழக அரசு தரப்பில் குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
இதற்கிடையே தி.மு.க.,வின் நீட் கையெழுத்து இயக்கத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் வழக்கறிஞர் எம்.எல்.ரவி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த ரிட் மனுவானது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், குறிப்பாக நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் பள்ளிகளில் நடத்தப்படுகிறது. இதனால் மாணவர்கள் நிர்பந்தம் செய்யப்படுகிறார்கள். இதனால் நீட் தேர்வுக்கு தயாராக வேண்டாம் என்ற எண்ணம் மாணவர்கள் மனதில் ஏற்படும். படிப்பில் இருந்து மாணவர்களின் கவனம் திசை திரும்பும். அதனால் பள்ளிகளில் கையெழுத்து இயக்கம் நடத்த அனுமதிக்க கூடாது அதற்கு தடை விதிக்க வேண்டும், என்று வாதிடப்பட்டது.
இந்த வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதிகள் “கையெழுத்து இயக்கத்தை மக்கள் ஏற்கிறார்கள் என்றால் அதை எப்படி தடுக்க முடியும்? குறிப்பாக இந்த காலகட்டத்தில் இருக்கும் மாணவர்கள் சிறந்த அறிவாளிகள். அவர்களுக்கு அனைத்தும் தெரியும். நாம் எதனையும் குறிப்பிட்டு தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை” எனக் கூறினர். மேலும், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என தெரிவித்த, நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.