மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தவறாக பயன்படுத்தி, குறிப்பிட்ட ஒரு சின்னத்திற்கு மட்டும் வாக்குகள் அதிகம் விழும்படி செய்ய முடியும் என்கிற குற்றச்சாட்டு, இயந்திரம் மூலமாக வாக்குப்பதிவு தொடங்கிய காலத்தில் இருந்தே கூறப்படுகிறது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் பலமுறை விளக்கமளித்தாலும் யாரும் கேட்கும் மனநிலையில் இல்லை. மே 25, 2009 அன்று நடைபெற்ற பா.ம.க. பொதுக்குழுவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்படுத்தி, குறிப்பிட்ட ஒரு சின்னத்திற்கு மட்டும் அதிக வாக்குகள் விழ வைக்க முடியும் என செய்முறை விளக்கமளித்தார்கள். மீண்டும் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் என தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், எதிர்வரும் பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர முறையை ஒழித்துவிட்டு, மீண்டும் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. "நியாய பூமி" என்கிற பொதுத் தொண்டு நிறுவனம் தொடுத்திருந்த இவ்வழக்கு, நவம்பர் 22ம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
"எந்தவொரு வாக்குப்பதிவு முறையிலும், இயந்திரத்திலும் நல்ல முறையாகவோ, தவறான முறையாகவோ பயன்படுத்தும் வாய்ப்பிருக்கிறது. சந்தேகம் எல்லா இடத்திலும் தான் இருக்கிறது!" என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்தனர்.