/indian-express-tamil/media/media_files/2025/05/06/KchgfKVQiGOaKsl6sUea.jpg)
இந்த மேல்முறையீட்டு மனு தொடர்பாக தமிழ்நாடு அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டதுடன், நிலுவையில் உள்ள நெரூர் மடம் வழக்கை கர்நாடக மாநிலம் தொடர்பான வழக்கோடு இணைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கரூர் மாவட்டம், நெரூரில் சதாசிவ பிரம்மேந்திரரின் சமாதியில் அவரது நினைவு நாளில் எச்சில் இலையில் உருளச் செய்யும் சடங்குக்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடை நீடிக்கும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும், எச்சில் இலையில் உருளச் செய்யும் சடங்கு தொடர்பான வழக்கை முறையாக நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு மக்கள் உரிமை பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வாஞ்சிநாதன் வலியுறுத்தியுள்ளார். எச்சில் இலை சடங்குக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் அரசு கேவியட் மனு தாக்கல் செய்ய வேண்டும். எச்சில் இலை சடங்கை சுயமரியாதை மரபு கொண்ட தமிழக பக்தர்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள நெரூர் என்ற கிராமத்தில் சதாசிவ பிரம்மேந்திரரின் சமாதியில் அவரது நினைவு நாளில் எச்சில் இலையில் உருளும் அங்கபிரதட்சணம் செய்யப்பட்டு வந்தது. இந்த சடங்கில் ஒரு சாதி பிரிவினர் உண்ட இலையில் பிற சாதியினர் உருளும் சடங்கு என்பது ஆன்மீகத்துக்கும், மனிதத் தன்மைக்கும், சுகாதாரத்துக்கும் எதிரான சடங்கு என இதை எதிர்த்து அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்கள் சங்க தலைவர் அரங்கநாதன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இச்சடங்கிற்கு தடை விதித்து உத்தரவிட்டது.
இதையடுத்து, இந்த விவகாரத்தில் அரங்கநாதன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து எச்சில் இலையில் உருளும் சடங்கை நடத்த அனுமதிக்ககோரி நெரூர் மடம் சார்ப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா மற்றும் பக்ஷி அமர்வில் இன்று(மே.05) விசாரணைக்கு வந்தது. அப்போது, நெரூர் மடம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், இந்த சடங்கில் கீழ் சாதியனர் தான் எச்சில் இலையில் உருளுகின்றனர் என்ற குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது. அதேவேளையில் இது ஒரு வழிபாட்டு சடங்கு ஆகும். எனவே இந்த சடங்கை நடத்த அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் குமணன், ஏற்கனவே கர்நாடகா மாநிலத்தில், குக்கே சுப்பிரமணிய சாமி கோவிலில் நடைபெற்று வந்த எச்சில் இலை சடங்கை உச்சநீதிமன்றம் தடை செய்துள்ளது. மனிதத் தன்மையற்ற இது போன்ற சடங்குகளை அனுமதிக்க கூடாது. ஏற்கனவே உயர்நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இதனையடுத்து நீதிபதிகள், ஏற்கனவே இதே போன்ற ஒரு அங்கபிரதட்சணம் சடங்கு கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று வந்த நிலையில், அதற்கு உச்சநீதிமன்றமானது தடை உத்தரவை பிறப்பித்து இருக்கிறது. அந்த உத்தரவை நாங்கள் மீற முடியாது. மேலும், இந்த வழக்கைப் பொறுத்தவரைக்கும் சென்னை உயர்நீதிமன்றம் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்தே ஆணை பிறப்பித்துள்ளது.
எனவே, அந்த தடை ஆணையை நாங்கள் நீட்டிக்கிறோம் என உத்தரவிட்டனர், மேலும், இந்த மேல்முறையீட்டு மனு தொடர்பாக தமிழ்நாடு அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டதுடன், நிலுவையில் உள்ள நெரூர் மடம் வழக்கை கர்நாடக மாநிலம் தொடர்பான வழக்கோடு இணைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.