former AIADMK minister Ranjendra Balaji : ஆவின்பால் துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாக மூன்று கோடி ரூபாய் மோசடி செய்ததாக முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் தேடப்பட்டு வந்த முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 18 நாட்களுக்கு பிறகு ஜனவரி மாதம் 5ம் தேதி அன்று கர்நாடகாவில் உள்ள ஹாசன் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டார். நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட அவர் பிறகு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜனவரி மாதம் 6ம் தேதி அன்று ஸ்ரீவில்லிப்புத்தூர் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பரம்வீர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜனவரி 20ம் தேதி வரை 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார்.
பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அவரின் ஜாமின் மனு இன்று உச்ச நீதிமன்ற விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பு வாதத்தில், ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கில் அரசியல் பழிவாங்கும் நோக்கம் ஏதும் இல்லை. வேலை வாங்கி தருவதாக கூறி ஏழைகளிடம் பணம் வசூலித்த நபர்களுக்கு உச்ச நீதிமன்றம் எந்தவிதமான பாதுகாப்பும் வழங்கக் கூடாது என்று கூறப்பட்டது. முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டவுடன் அவர் ஏன் தலைமறைவாக வேண்டும் என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.
ராஜேந்திர பாலாஜி கைதுக்கு பின்னால் இருக்கும் அரசியல் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. ஆனால் அவர் கைது செய்யப்பட்ட விதம் ஏற்புடையதல்ல என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறினர். உரிய உத்தரவின்றி சோதனை செய்த காவல் துறை அதிகாரிகளுக்கு எதிராக ஏன் விசாரணை நடத்த உத்தரவிடக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
நான்கு வார நிபந்தனை ஜாமின் வழங்கிய உச்ச நீதிமன்றம், ராஜேந்திர பாலாஜி தன்னுடைய பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் விருதுநகரை விட்டு ராஜேந்திர பாலாஜி வேறெங்கும் வெளியேற கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil