வழக்கறிஞர் எல். விக்டோரியா கவுரியை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நாளை (பிப்ரவரி 07) விசாரணைக்கு வருகிறது.
மனுதாரர்கள், வழக்கறிஞர் எல். விக்டோரியா கவுரி பா.ஜ.க-வைச் சேர்ந்தவர் என்று கூறி அவருடைய நற்பெயர் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், விக்டோரியா கவுரியை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்ய பரிந்துரை செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
வழக்கறிஞர் எல் விக்டோரியா கவுரியை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்த பரிந்துரையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை விசாரணைக்கு பட்டியலிட்டுள்ளது. விக்டோரியா கவுரி பா.ஜ.க-வைச் சேர்ந்தவர் என்று கூறி மனுதாரர்கள் அவருடைய நற்பெயர் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, மனு தாக்கல் செய்த வழக்கறிஞரிடம் சில முன்னேற்றங்கள் நடந்ததாகக் கூறியுள்ளது. “மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின்… கொலீஜியத்தின் பரிந்துரையின் பேரில் நாங்கள் எங்கள் பரிந்துரைகளை அளித்த பிறகு, இது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது அல்லது எங்கள் கவனத்திற்கு வந்ததை கொலீஜியம் அறிந்திருக்கிறது. அதன்பிறகு, நடந்த சில முன்னேற்றங்களை நாங்கள் அறிந்திருப்பதால், இந்த விஷயத்தை நாளை காலை விசாரணைக்கு பட்டியலிடுவதுதான் எங்களால் செய்ய முடியும்” என்று தெரிவித்துள்ளனர்.
தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், “நான் ஒரு நீதிபதிகள் அமர்வை அமைக்கிறேன். நாளை காலை இந்த அமர்வு முன் விசாரணை நடக்கும்” என்று தெரிவித்துள்ளார். நீதிபதிகள் பி.எஸ். நரசிம்ஹா மற்றும் ஜே.பி.பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கை, பிப்ரவரி 7, 2023 விசாரிக்க பட்டியலிட உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் முதலில் திங்கள்கிழமை காலை நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டது. நீதிமன்றம் முதலில் இதை பிப்ரவரி 10-ம் தேதி விசாரணைக்கு ஒத்திவைத்தது. சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக வழக்கறிஞர் விக்டோரியா கவுரியை நியமிப்பது குறித்து மத்திய அரசு அறிவித்ததையடுத்து, பிற்பகலில், மனுதாரர்கள் மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுகினர்.
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜு ராமச்சந்திரன், மதியம் 12.12 மணிக்கு நியமனம் அறிவிக்கப்பட்டதாகவும், இந்த நிலையிலும் உச்ச நீதிமன்றம் தலையிடலாம் என்றும் உச்ச நீதிமன்ற அமர்வு முன்பு தெரிவித்தார். தகுதியின் அடிப்படையில் தான் தனது வாதத்தை முன்வைப்பதாகக் கூறிய அவர், கொலிஜியத்திடம் இருந்து சில முக்கியத் தகவல்களை ஒதுக்கி வைத்து முடக்கியது என்றும் கூறினார்.
தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான, நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற கொலீஜியம், வழக்கறிஞர் விக்டோரியா கவுரி உள்பட 5 பேரின் பெயரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்ய ஜனவரி 17ம் தேதி பரிந்துரை செய்ததது. இதற்கு சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் உச்ச நீதிமன்ற கொலீஜியத்திற்கு மனு அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"