சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கோட்டூர்புரத்தைச் சோ்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆா்) பொது வெளியில் வெளியாகி அதிா்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து சென்னை உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை செய்து, சென்னை பெருநகர காவல் துறை அண்ணா நகா் துணை ஆணையா் புக்யா சினேக பிரியா, ஆவடி மாநகர காவல் துணை ஆணையா் அய்மன் ஜமால், சேலம் மாநகர காவல் துணை ஆணையா் பிருந்தா ஆகியோா் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உத்தரவிட்டிருந்தது. மேலும், சென்னை காவல் ஆணையர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க தமிழக காவல்துறைக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், சென்னை காவல் ஆணையருக்கு எதிரான உயர் நீதிமன்ற கருத்துகளுக்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பான முதல் தகவல்அறிக்கை வெளியான சம்பவம் தொடர்பாக விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சென்னை காவல் ஆணையருக்கு எதிராக உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. தமிழக அரசின் மேல் முறையீட்டில், சென்னை காவல் ஆணையருக்கு எதிரான கருத்துகளுக்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரிக்கத் தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அண்ணா பல்கலை. மாணவி விவரங்கள் அடங்கிய முதல் தகவல் அறிக்கையை வெளியிட்டது யார்? முதல் தகவல் அறிக்கை கசிந்த விவகாரத்தில் எடுத்த நடவடிக்கை என்ன மாணவியின் தரவுகள் தற்போதும் சமூக வலைதளங்களில் உள்ளதா? எவ்வளவு நேரத்திற்கு அந்த ஆவணம் பதிவிறக்கம் செய்யும் வகையில் இருந்தது?” என அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் உச்ச நீதிமன்றம் அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பியது.
மேலும், “பாதிக்கப்பட்டவரை பழிவாங்குவதை சமூகம் தவிர்க்க வேண்டும். பாதிக்கப்பட்டவரை தவறாக சித்திரிப்பது குற்றவாளிகளை பாதுகாக்க வழிவகுக்கும். மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், முதல் தகவல் அறிக்கை கசிந்ததற்கு, காரணமாக இருந்தவர்களிடமிருந்து இழப்பீட்டைப் பெற்று மாணவிக்கு வழங்க வேண்டும். அதே போல, குற்றவியல் வழக்கில் பாதிக்கப்பட்டவர் கோரும் இழப்பீடு, தற்போதைய இழப்பீட்டைப் பாதிக்காது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதற்கு, மாணவியை பாதுகாக்க நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கத் தயாராக இருந்தோம். எஃப்.ஐ.ஆர் வெளியானதில், மத்திய அரசின் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது; காவல்துறை அதிகாரி என்ன செய்வார்? என்று தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
முதல் தகவல் அறிக்கைக்கு விவரங்களை கொடுக்கும்போது பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆலோசனை கொடுத்திருக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர் மீது பழி சுமத்தும் வகையில் உணர்ச்சியற்ற முறையில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.