அதிமுக உறுப்பினர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களுமான ரத்னசபாபதி, கலைச்செல்வன், மற்றும் பிரபு ஆகியோருக்கு எதிராக சபாநாயகர் தனபால் நோட்டீஸ் விடுத்திருந்தார். அமமுக கட்சிக்கு ஆதரவாக அவர்கள் செயல்படுகிறார்கள் என்று குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எட்டப்பட்டது.
இதற்கு இந்த மூன்று எம்.எல்.ஏக்களும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மேலும், அமமுக கட்சியில் நாங்கள் அடிப்படை உறுப்பினர்கள் கூட இல்லை என்றும் கூறியிருந்தனர். திமுக தலைவர் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்னசபாபதி, விருத்தாச்சலம் எம்.எல்.ஏ கலைச்செல்வன், மற்றும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு ஆகிய மூவருக்கும் எதிராக கொடுக்கப்பட்ட நோட்டீஸிற்கு எதிர்ப்பு தெரிவித்து ரத்தின சபாபதி மற்றும் கலைச்செல்வன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தனர். இதன் விசாரணை இன்று துவங்கியது. 3 எம்.எல்.ஏக்களுக்கு எதிராக சபாநாயகர் அளித்த நோட்டீசுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கினை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதி தீபக் குப்தா விசாரணை செய்து உத்தரவினை பிறப்பித்தார்கள். இது குறித்து கருத்து தெரிவித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், இது இடைக்கால உத்தரவு தான். தீர்ப்பிற்கு பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
மேலும் படிக்க : டிடிவி ஆதரவு 3 எம்.எல்.ஏ.க்கள் நோட்டீஸ் விவகாரம்: சபாநாயகர் மீது திமுக நம்பிக்கையில்லா தீர்மானம்