V Senthil balaji | Enforcement Directorate | Supreme Court: சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரித்த அமலாக்கத்துறை விசாரணைக்குப் பிறகு ஆகஸ்ட் 12ம் தேதி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கில் அவருக்கு 30 முறை (ஏப்ரல் 4 ஆம் தேதி வரை) நீதிமன்ற காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் புழல் சிறையில் நீதிமன்ற காவலில் இருந்து வருகிறார். இலாக்கா இல்லாத அமைச்சராக இருந்த அவர் பிப்ரவரி 12 அன்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
ஏற்கனவே அவரது ஜாமீன் மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம், முதன்மை அமர்வு நீதிமன்றமும் நிராகரித்த நிலையில், 2வது முறையாக செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் வேண்டி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், பிப்ரவரி 28 ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில், 'இந்த வழக்கில் திரட்டப்பட்ட ஆதாரங்களில் இருந்து செந்தில் பாலாஜி குற்றத்தில் ஈடுபடவில்லை என நம்புவதற்குரிய எந்த காரணங்களும் இல்லை என்று
அமைச்சா் பதவியை ராஜினாமா செய்துவிட்டதால் சாட்சி களைகலைக்கமாட்டாா் எனும் வாதத்தை ஏற்க முடியாது. இந்த வழக்கில் அவர் ஜாமீன் பெற எந்தத் தகுதியும் இல்லை என்பதால் அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்த வழக்கின் விசாரணையை 3 மாதத்திற்குள் முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்' என்றும் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவில், மனுதாரா் 280 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருந்து வருகிறாா். அவருக்கு பல்வேறு உடல் உபாதைகள் உள்ளன. மேலும், புலனாய்வு அமைப்பின் விசாரணைக்கு அவா் ஒத்துழைப்பு அளித்திருக்கிறாா். இதுபோன்ற பல்வேறு விஷயங்களை உயா்நீதி மன்றம் பரிசீலிக்கத் தவறிவிட்டது என்றும் குறிப்பிட்டது.
இந்நிலையில், இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பாக ஏப்ரல் 29 ஆம் தேதிக்குள் பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் மாவட்ட முதன்மை நீதிமன்றம் வழக்கை 3 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிடவும் உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“