பிரபல யூட்யூபர் சங்கர் என்ற சவுக்கு சங்கர் சவுக்கு மீடியாவை நடத்திவந்தார். இந்நிலையில், யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், காவல் துறை அதிகாரி மற்றும் பெண் போலீஸ் குறித்து அவர் தெரிவித்த கருத்துகள் சர்ச்சைக்குள்ளாகின.
இந்த நிலையில் கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் தேனியில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது கோவை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த நிலையில் அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த குண்டர் சட்டத்தினை ரத்து செய்ய வேண்டும் என சவுக்கு சங்கர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இருவேறு மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்தனர்.
இந்த நிலையில், சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவரது தாயார் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு மீதான விசாரணையில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் விலகியுள்ளார்.
மேலும், தான் இடம்பெறாத அமர்வு முன் மனுவை பட்டியலிடுமாறு, தலைமை நீதிபதிக்கு கோப்புகளை அனுப்பியுள்ளார். எனினும் வழக்கு விசாரணையில் இருந்து அவர் விலகியதற்கான காரணங்கள் குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் வெளியாகவில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“