/indian-express-tamil/media/media_files/2025/07/29/senthil-balaji-case-2025-07-29-20-24-12.jpg)
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கில், சுமார் 2,000 பேரை குற்றவாளிகளாக சேர்த்து விசாரணையை இழுத்தடிக்க முயற்சிப்பதாக, ஸ்டாலின் அரசு மீது உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்
குறிப்பாக, "முன்னாள் அமைச்சரின் வாழ்நாள் முழுவதும் விசாரணை முடிவடையாது என்பதே உங்கள் செயல்பாட்டு முறை. இது அமைப்பிற்கு எதிரான மோசடி. வேலைக்காக லஞ்சம் கொடுத்ததாக சொல்லப்படும் இவர்களை, நீங்கள் அனைவரும் குற்றவாளிகளாக்குகிறீர்கள். இரண்டு வழக்குகளில் 2,000 குற்றவாளிகள் என்ற நிலையில் இருக்கிறார்கள்" என நீதிபதி சூர்ய காந்த் கடுமையாக விமர்சித்தார்.
சென்னை பெருநகர போக்குவரத்து கழகத்தில் நடந்த முறைகேடான ஆட்சேர்ப்பு தொடர்பான நான்கு கூடுதல் குற்றப்பத்திரிகைகளை ஒன்றிணைக்கும் விசாரணை, நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் மார்ச் 28, 2025 அன்று நிராகரித்தது. இதனை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஒய். பாலாஜி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை இந்த அமர்வு விசாரித்தது.
குற்றப்பத்திரிகைகளை ஒன்றிணைத்ததை எதிர்த்து ஊழல் எதிர்ப்பு இயக்கம் தாக்கல் செய்த மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தபோது, குற்றங்கள் ஒரே பரிவர்த்தனையின் பகுதியாகும் என்றும், தனித்தனியாக கருத முடியாது என்றும், அனைத்து குற்றப்பத்திரிகைகளிலும் ஒரே சாட்சிகள் மற்றும் ஆவணங்கள் சம்பந்தப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டது. குற்றவாளிகளின் எண்ணிக்கை 2,202 ஆக இருப்பதை சுட்டிக்காட்டிய உயர் நீதிமன்றம், தனித்தனி வழக்கு விசாரணைகள் நடைமுறையை தாமதப்படுத்தும் என்று கூறியிருந்தது.
நான்கு குற்றப்பத்திரிகைகளை குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், "பணம் யாருக்கு கொடுக்கப்பட்டது என்று கூறப்படும் இடைத்தரகர்கள் யார்? அமைச்சரின் தூண்டுதலின் பேரில் செயல்பட்ட அதிகாரிகள் யார்? நியமன வாரியத்தில் இருந்தவர்கள் அல்லது இந்த நியமனங்களை செய்த அதிகாரிகள் யார்?" என்று கேள்வி எழுப்பியது.
மாநில அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.எம். சிங்வி, இந்தத் தகவல் மற்றுமொரு மனுவில் இருப்பதாகவும், அது நீதிமன்றத்தில் பட்டியலிடப்படவில்லை என்றும் கூறினார். இந்த விவகாரங்கள் அனைத்தும் புதன்கிழமை மீண்டும் பட்டியலிடப்பட வேண்டும் என்று அமர்வு உத்தரவிட்டது.
மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், ஆளுங்கட்சியான தி.மு.க தலைவரை காப்பாற்ற மாநில அரசு மேற்கொண்ட முயற்சிகளை உச்ச நீதிமன்றம் முந்தைய உத்தரவுகளில் விமர்சித்துள்ளதாக சுட்டிக்காட்டினார். மாநில அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அமித் ஆனந்த் திவாரி, மனுதாரர் உயர் நீதிமன்றத்தை அணுகாமல் நேரடியாக உச்ச நீதிமன்றத்தை அணுகுகிறார் என்று குறிப்பிட்டார்.
செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டுகள், அவர் 2011-2016 காலகட்டத்தில் அப்போதைய அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது நடந்தவை. 2014-15 ஆம் ஆண்டில், பாலாஜி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, அனைத்து மாநில போக்குவரத்து கழகங்களின் அப்போதைய நிர்வாக இயக்குநர்கள் மற்றும் பிற போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் சதி செய்து, ஓட்டுநர்கள், நடத்துநர்கள், இளநிலை தொழில் வல்லுநர்கள், இளநிலை உதவியாளர்கள், இளநிலை பொறியாளர்கள் மற்றும் உதவி பொறியாளர்கள் ஆகியோரை நியமிக்க சட்டவிரோதமாக பணத்தை பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை, அவருக்கு எதிராக பணமோசடி வழக்கு பதிவு செய்து, 2023 ஜூன் மாதம் அவரை கைது செய்தது. அப்போது அவர் தற்போதைய தி.மு.க. ஆட்சியில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்தார்.
உச்ச நீதிமன்றம், அவருக்கு 2024 செப்டம்பர் 26 அன்று ஜாமின் வழங்கியது. அவருக்கு எதிரான வழக்கு விசாரணை விரைவில் தொடங்க வாய்ப்பில்லை என்றும், அவர் ஏற்கனவே ஒரு வருடத்திற்கும் மேலாக சிறையில் இருந்தார் என்றும் குறிப்பிட்டது. மூன்று நாட்களுக்குப் பிறகு, செப்டம்பர் 29 அன்று, ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசில் அவர் மீண்டும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார்.
இதையடுத்து அமலாக்கத்துறை, சாட்சிகள் மீது தனது அதிகாரத்தை செலுத்துவதின் அடிப்படையில் செந்தில் பாலாஜியின் ஜாமினை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகியது. ஏப்ரல் 23 அன்று இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவர் மீண்டும் அமைச்சராக நியமிக்கப்பட்டதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்தது. ஏனெனில் அவர் ஜாமின் கோரியதற்கான காரணங்களில் ஒன்று, அவர் இனி அமைச்சர் அல்ல என்பதும், அதன் காரணமாக விசாரணையில் அதிகாரம் செலுத்த முடியாது என்பதும் ஆகும்.
ஏப்ரல் 23 அன்று, உச்ச நீதிமன்றம் பாலாஜியிடம், தனது அமைச்சர் பதவியை தக்கவைத்துக் கொள்ள விரும்புகிறாரா அல்லது நடந்து வரும் வழக்கில் தனது ஜாமினை பாதுகாத்துக் கொள்ள விரும்புகிறாரா என்று முடிவெடுக்குமாறு கூறியது. பின்னர், அவர் அமைச்சர் பதவியிலிருந்து விலக முடிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.