வள்ளலார் சர்வதேச மைய கட்டுமான பணிகளை மேற்கொள்ள இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் வடலூரில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க தமிழக அரசு சார்பில் சமீபத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது. வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் கட்டுமானப் பணிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து வினோத் ராகவேந்திரன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனுவில், ஆன்மீக மையத்தை வணிக மயமாக்க முடியாது. அது ஏழைகளின் முன்னேறத்துக்கான இடம். வள்ளலார் கோவிலில் சர்வதேச மையம் கட்டுவது வள்ளலாரின் விருப்பத்துக்கு எதிரானது என அதில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வள்ளலார் சர்வதேச மையத்தை கட்டுவது சட்டவிரோதம் என்றும் வள்ளலார் விருப்பத்துக்கு எதிரானது எனவும் வாதிட்டார். இதனைப் பதிவு செய்துகொண்ட உச்ச நீதிமன்றம் வள்ளலார் சர்வதேச மையத்தின் புதிய கட்டுமானங்களுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
மேலும், இந்த வழக்கு விசாரணை முடியும் வரை தற்போதையே நிலையே தொடர வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு அறிவுறுத்தியது. மேலும், இது தொடர்பாக தமிழக அரசுக்கும் நோட்டீஸ் பிறப்பித்து, வழக்கை பிப்ரவரி 28ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.