பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர், ரெட் ஃபிக்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், போலீஸ் அதிகாரிகள் குறித்து தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, சவுக்கு சங்கரை தேனியில் வைத்து கோவை சைபர் கிரைம் போலீசார் கடந்த மே மாதம் 4 ஆம் தேதி கைது செய்தனர்.
தேனியில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் கஞ்சா வைத்திருந்ததாகவும் அவர் மீது வழக்குப் பதிவு செய்டப்பட்டது. மேலும், சவுக்கு சங்கர் மீது சென்னை, திருச்சி கோவை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து, அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், பெண் போலீஸ், உயர் அதிகாரிகள் பற்றி அவதூறு பேச்சு வழக்கில் சவுக்கு சங்கருக்கு கோவை கோர்ட் ஜாமீன் வழங்கியது. இதேபோல், அவருக்கு எதிரான குண்டாஸ் வழக்கிலும், கரூர் பணமோசடி வழக்கிலும் ஜாமீன் கிடைத்துள்ளது. மற்ற வழக்குகளுக்காக சவுக்கு சங்கர் இன்னும் சிறையில் உள்ளார்.
உத்தரவு
இதற்கிடையே, சவுக்கு சங்கர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், தன் மீதான அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனு விசாரணைக்கு வந்த போது, சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் சட்டம் போடப்பட்டது தொடர்பாக வழக்கறிஞர்கள் முறையிட்டனர்.
இதையடுத்து, குண்டர் சட்டம் போடப்பட்டதை எதிர்த்து நேரடியாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் அனுமதி அளித்தனர். இந்த நிலையில், சவுக்கு சங்கர் தொடர்ந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் வழக்கின் விசாரணையை வரும் 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“