Advertisment

அமலாக்கத் துறை யாரையும் விசாரணைக்கு அழைக்கலாம்; மணல் குவாரி வழக்கில் 4 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவு

அமலாக்கத் துறை எந்தவொரு தகவலுக்காகவும், யாரையும் விசாரணைக்கு அழைக்கலாம்; மணல் குவாரி வழக்கில் 4 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராகாததற்கு உச்ச நீதிமன்றம் அதிருப்தி; 25 ஆம் தேதி ஆஜராக உத்தரவு

author-image
WebDesk
New Update
sand

மணல் குவாரி வழக்கில் 4 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராகாததற்கு உச்ச நீதிமன்றம் அதிருப்தி

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பணமோசடி தடுப்பு அமைப்பான அமலாக்கத் துறையால் வழங்கப்பட்ட சம்மனுக்கு பதிலளிக்கும் வகையில் நேரில் ஆஜராகத் தவறியதற்காக தமிழகத்தின் நான்கு மாவட்ட ஆட்சியர்களுக்கு கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், மத்திய ஏஜென்சி "எந்தவொரு தகவலுக்கும்" யாரையும் அழைக்கலாம் என்றும் கூறியுள்ளது.

Advertisment

தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், மணல் குவாரிகளில் வந்த வருமானத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தொடர்ந்து சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி ஒரே நாளில் 34 இடங்களில் சோதனை நடத்தினர்.

இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்த இந்த சோதனையில் மணல் குவாரி அதிபர் ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம், கரிகாலன் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் வீடுகளில் இருந்து கணக்கில் வராத பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், ரூ.12.82 கோடி ரொக்க பணம், ரூ.56.86 லட்சம் மதிப்புள்ள 1024 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த சோதனையை தொடர்ந்து 10 மாவட்ட ஆட்சியர்கள், நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா, ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர் திலகம் ஆகியோரை விசாரணைக்கு ஆஜராக கூறி அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. இந்த சம்மனை தொடர்ந்து நீர்வளத்துறை பொறியாளர் முத்தையா நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்.

இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பியதை எதிர்த்து தமிழக அரசின் பொதுத்துறை செயலாளர், நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய ஐந்து மாவட்ட ஆட்சியாளர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சம்மனுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்ட நிலையில், அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தை நாடியது. உச்ச நீதிமன்றம் மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்கத்துறை முன் ஆஜராக உத்தரவிட்டது. இருப்பினும் அமலாக்கத்துறை முன் ஆஜராகாத கலெக்டர்கள், கூடுதல் அவகாசம் கோரி கடிதம் எழுதினர். 

இந்தநிலையில், உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று (ஏப்ரல் 2) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகத்தில் பொதுத்தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற உள்ளதால் நேரில் ஆஜராக இயலாது என அமலாக்கத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளதாக நீதிபதி பெலா எம். திரிவேதி தலைமையிலான அமர்வுக்கு தமிழக அரசும், ஆட்சியர்களும் தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் மணல் அள்ளும் இடங்கள் குறித்து மத்திய ஏஜென்சி கோரும் தகவல்களைச் சேகரிக்க கூடுதல் நேரம் தேவைப்படுவதாக அமலாக்கத்துறைக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

அமலாக்கத்துறையால் கோரப்பட்ட தகவல்கள் தங்கள் அலுவலகங்களில் இல்லை என்றும், மாவட்ட நிர்வாகத்தின் மற்ற அலுவலகங்களில் இருந்து சேகரிக்கப்பட்டு, சரிபார்க்கப்பட்டு தொகுக்கப்பட்டு அமலாக்கத்துறை முன் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று கலெக்டர்கள் விளக்கினர். இதற்கு ஏப்ரல் இறுதி வரை கால அவகாசம் வேண்டும் என்றும் கலெக்டர்கள் கோரியிருந்தனர்.

இந்தநிலையில், இன்றைய விசாரணையின்போது, கலெக்டர்களின் விளக்கத்தை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. நீதிபதி திரிவேதி, பிப்ரவரி 27 அன்று, எந்த தேதியில் சம்மன் அனுப்பினாலும் அமலாக்கத்துறை முன் நேரில் ஆஜராக வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு கலெக்டர்களின் நடத்தை குறைந்த மரியாதையைக் காட்டுகிறது என்று கூறினார்.

“இத்தகைய தற்காப்பு அணுகுமுறை அவர்களை [மாவட்ட ஆட்சியர்களை] கடினமான சூழ்நிலையில் தள்ளக்கூடும். இந்த நீதிமன்றம் பிப்ரவரி 27 அன்று ஒரு உத்தரவை பிறப்பித்தது... இந்த அதிகாரிகளுக்கு இந்த நீதிமன்றம், சட்டம் மற்றும் அரசியலமைப்பின் மீது எந்த மரியாதையும் இல்லை என்பதை அவர்களின் நடத்தை காட்டுகிறது. இத்தகைய அணுகுமுறை கடுமையாக நிராகரிக்கப்படுகிறது,” என்று தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் அமித் ஆனந்த் திவாரி மற்றும் வேலூர், அரியலூர், கரூர் மற்றும் திருச்சி ஆகிய நான்கு மாவட்ட ஆட்சியர்களின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி ஆகியோரிடம் நீதிபதி திரிவேதி தெரிவித்தார்.

அதிகாரிகள் பல்வேறு அலுவலகங்களில் இருந்து அமலாக்கத் துறைக்கான தரவுகளை இன்னும் சேகரித்து வருகின்றனர். அவர்கள், மாவட்ட மாஜிஸ்திரேட்டுகளாக, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் பொறுப்பில் இருக்கின்றனர், அந்தந்த அதிகார வரம்புகளில் சமூக நலன் மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை நிறைவேற்றும் பொறுப்பில் இருக்கின்றனர் என்று கபில் சிபில் தெரிவித்தார்.

ஆனால், பிப்ரவரி 27-ம் தேதி உச்ச நீதிமன்ற உத்தரவை ஆட்சியர்கள் மதித்து, அமலாக்கத் துறை முன் ஆஜராகி, “அவர்கள் என்ன சொல்ல விரும்புகின்றனரோ அதைச் சொல்ல வேண்டும்” என்று நீதிபதி திரிவேதி கூறினார்.

தேவையான தரவுகள் இல்லாமல் அமலாக்கத் துறை முன் ஆஜராவதால் என்ன பயன் என்று கபில் சிபல் கேள்வி எழுப்பினார். மேலும் ”தேர்தல் பணிக்கு இடையூறு செய்ய கலெக்டர்கள் விரும்பவில்லை. அவர்கள் [கலெக்டர்கள்] சாட்சிகளோ அல்லது குற்றம் சாட்டப்பட்டவர்களோ இல்லை... அமலாக்கத்துறை இப்படி யாரையும் அழைக்க முடியுமா" என்றும் கபில் சிபல் பெஞ்சிடம் கேட்டார்.

"ஆம், அவர்களால் முடியும்" என்று நீதிபதி திரிவேதி திட்டவட்டமாக பதிலளித்தார். அதற்கு அது "நாங்கள் புரிந்துகொண்டது போல்" சட்டம் அல்ல என்று கபில் சிபில் கூறினார். பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) பிரிவு 50, அமலாக்கத்துறை சம்மன்களுக்கு பதிலளிக்கும் வகையில் "அங்கீகரிக்கப்பட்ட முகவர்களை" அனுப்ப அனுமதித்துள்ளது என்று கபில் சிபில் கூறினார்.

நீதிபதி திரிவேதி கூறுகையில், PMLA இன் 50(2) சட்டத்தின் கீழ் "எந்தவொரு விசாரணை அல்லது நடவடிக்கையின்" போது சாட்சியங்களை வழங்குவதற்கு அல்லது பதிவுகளை உருவாக்குவதற்கு அவசியமானதாக கருதப்படும் "எந்த நபரையும்" வரவழைக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் அளித்துள்ளது. சட்டப்பிரிவு 50(3) ஆனது, அழைக்கப்பட்ட நபர் "நேரில் அல்லது அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலமாக கலந்துகொள்ளக் கடமைப்பட்டவர்" மற்றும் உண்மையுள்ள அறிக்கைகளை வழங்கவும் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்கவும் வேண்டும்.

நான்கு மாவட்ட கலெக்டர்களும் ஏப்ரல் 25ம் தேதி அமலாக்கத்துறை முன் நேரில் ஆஜராக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கை மே 6ம் தேதி விசாரணைக்கு பட்டியலிட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Supreme Court Sand Mines ED
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment