Supreme court order to Chennai High court probe EPS tender case: நெடுஞ்சாலைத் துறை டெண்டர் முறைகேடு தொடர்பான எடப்பாடி பழனிச்சாமி வழக்கில் சி.பி.ஐ விசாரணையை ரத்து செய்துள்ள உச்ச நீதிமன்றம், வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2011-16 ஆம் ஆண்டு காலகட்ட அ.தி.மு.க ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்தவர் எடப்பாடி பழனிச்சாமி. அப்போது நெடுஞ்சாலைத் துறையில் ரூ.4800 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களை தனது நெருங்கிய உறவினர்களுக்கு வழங்கி, ஆதாயம் அடையில் வகையில் செயல்பட்டுள்ளார் என கூறி தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதையும் படியுங்கள்: மாற்று இடத்தை ஏற்க முடியாது; சாஸ்த்ரா பல்கலை. கோரிக்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு
கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்றும், வழக்கின் ஆரம்பகட்ட விசாரணையை மூன்று மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமியும், தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையமும் தடைகேட்டு மேல்முறையீடு மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த 2018 நவம்பரில் இடைக்கால தடை விதித்தது.
இந்தநிலையில், இந்த வழக்கு நீண்டகாலமாக நிலுவையில் இருப்பதாக குறிப்பிட்டு, வழக்கை விரைந்து விசாரிக்கக் கோரி தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்தது. இதனை உச்ச நீதிமன்றம் மறுநாளே விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆர்.எஸ்.பாரதி தரப்பிடம் சி.பி.ஐ விசாரணைக்கு ஆட்சேபனை தெரிவிக்கிறீர்களா என உச்ச நீதிமன்றம் கேட்டது. அதற்கு ஆர்.எஸ்.பாரதி தரப்பில், சுதந்திரமான அமைப்பின் விசாரணை தேவை என்று கூறப்பட்டது. தமிழக அரசு சார்பிலும் இந்த விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து உச்ச நீதிமன்றம் ஏற்கனவே விதித்த தடையை நீக்கி, உயர் நீதிமன்ற விசாரணைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் சி.பி.ஐ விசாரணைக்கான உத்தரவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையத்தின் அறிக்கை அடிப்படையில், எவ்வாறு சுதந்திரமான அமைப்பைக் கொண்டு விசாரிக்கலாம் என்பதை சென்னை உயர் நீதிமன்றம் முடிவெடுக்கவும், வழக்கை தொடர்ந்து விசாரிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.