Advertisment

தமிழக சிறைகளில் சாதிய பாகுபாடுகளை அகற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு; புதிய விதிகளை வகுக்க ரவிக்குமார் எம்.பி வலியுறுத்தல்

’எந்தவொரு சமூகக் குழுவும் பிறக்கும்போதே துப்புரவு வேலை, எடுபிடி வேலைகளைச் செய்வதற்கோ அல்லது செய்யாமல் இருப்பதற்கோ பிறப்பதில்லை’; சிறைப் பதிவேடுகளிலிருந்து சாதி பற்றிய அடையாளங்கள் நீக்க உச்ச நீதிமன்றம் ஆணை

author-image
WebDesk
New Update
sc ravikumar

தமிழ்நாட்டுச் சிறைகளில் சாதிய பாகுபாடுகளை அகற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தமிழ்நாட்டில் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என வி.சி.க பொதுச்செயலாளரும் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக ரவிக்குமார் எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;

சிறைச்சாலைகளில் சாதிய பாகுபாடுகளை மறைமுகமாக வலியுறுத்தும் விதமாக சிறைக் கையேடுகளில் இருக்கும் விதிகளை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை இன்று வழங்கியிருக்கிறது. 

சுகன்யா சாந்தா என்ற பத்திரிகையாளர் இது தொடர்பாக மேற்கொண்ட ஆராய்ச்சியின் அடிப்படையில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். “தமிழ்நாட்டின் பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் தேவர், நாடார், பள்ளர் பிரிவுகளைச் சேர்ந்த சிறைவாசிகள் சாதி அடிப்படையில் தனித்தனி கொட்டடிகளில் அடைக்கப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது, சாதிய பாகுபாட்டுக்கு அப்பட்டமான உதாரணமாக இது இருக்கிறது." என அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். அந்த வழக்கில்தான் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பெரும்பாலான மாநில அரசுகள் பயன்படுத்தும் சிறைக் கையேடுகளில் (Prison Manuals) சாதிய பாகுபாடுகளை வலியுறுத்தும் விதிகள் இருப்பதை சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம் “எஸ்.சி, எஸ்.டி, சீர் மரபினர் சாதிகளைச் சேர்ந்தவர்களுக்குத் துப்புரவுப் பணியை ஒதுக்குவதும், உயர் சாதியினருக்கு சமையல் பணியை ஒதுக்குவதும் அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 15ஐ மீறுவது தவிர வேறில்லை என்று நாங்கள் கருதுகிறோம். சாதி வெளிப்படையாகக் குறிப்பிடப்படாவிட்டாலும், பட்டியல் சாதிகள் என்று அழைக்கப்படுபவர்களைக் குறிவைத்து இத்தகைய மறைமுகச் சொற்றொடர்களைப் பயன்படுத்துவது சட்ட விரோதமானது“ எனத் தீர்ப்பில் கூறியுள்ளது. 

“எந்தவொரு சமூகக் குழுவும் பிறக்கும்போதே துப்புரவு வேலை செய்வதற்கென்று பிறக்கவில்லை. எடுபிடி வேலைகளைச் செய்வதற்கோ அல்லது செய்யாமலிருப்பதற்கோ எவரும் பிறப்பதில்லை“ எனக் கூறியுள்ள உச்சநீதிமன்றம் “சிறைப் பதிவேடுகளிலிருந்து சாதி பற்றிய அடையாளங்கள் நீக்கப்பட வேண்டும்” என ஆணையிட்டுள்ளது. 

இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு சிறை கையேட்டில் விதிகள் 242 மற்றும் 273 ஆகியவற்றை நீக்கிவிட்டு புதிய சிறைக் கையேடு ஒன்றை உடனடியாகத் தயாரிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். 

சிறைவாசிகளின் சாதிப் பெயர்களைக் கேட்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் இப்போது உத்தரவிட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் சிறைவாசிகளின் சாதி அடையாளங்களைப் பதிவு செய்யும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. அதை உடனடியாக நிறுத்துவதோடு நீதிமன்ற உத்தரவின்படி ஏற்கனவே அவ்வாறு இருக்கும் பதிவேடுகளில் உள்ள பெயர்களையும் நீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன். 

இது தொடர்பாக கடந்த 06.03.2024 அன்று நான் சிறைத்துறை அமைச்சருக்கு விரிவாகக் கடிதம் ஒன்றை அளித்தேன். நேரிலும் சந்தித்து வலியுறுத்தினேன். புதிய சிறைக் கையேடு தயாரிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். ஆனால் அது இதுவரை நடைமுறைக்கு வரவில்லை. 
உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியதோடு மட்டுமின்றி இந்த தீர்ப்பை மாநில அரசுகள் நடைமுறைப்படுத்துவதைக் கண்காணிப்பதற்கு தானே முன்வந்து (suo moto) வழக்கு ஒன்றையும் பதிவு செய்துள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு காலம் தாழ்த்தாமல் இந்தத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும், தமிழ்நாட்டுச் சிறைகளில் கடைப்பிடிக்கப்படும் நேரடியான, மறைமுகமான சாதிய பாகுபாடுகளுக்கு முடிவுகட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். 

பத்திரிகையாளர் சுகன்யா சாந்தா சார்பில் மூத்த வழக்கறிஞர் டாக்டர் எஸ்.முரளிதர் மற்றும் வழக்கறிஞர்கள் பிரசன்னா.எஸ், மற்றும் திஷா வடேகர் ஆகியோர் ஆஜராகி வாதாடினர். அவர்களுக்கு என் பாராட்டுகள். இவ்வாறு ரவிக்குமார் எம்.பி அறிக்கை வெளியிட்டுள்ளார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamilnadu Supreme Court Ravikumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment