தமிழகத்தில் 1991 முதல் 1996 ஆம் ஆண்டு வரை அ.தி.மு.க-வின் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தார். அப்போது, வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை குவித்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரது வீட்டில் சோதனை நடத்தினர்.
இதில் அவர் ரூ.66.65 கோடி மதிப்புள்ள சொத்துகளை சட்டவிரோதமாக வாங்கி குவித்ததாக ஜெயலலிதா மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஜெயலலிதாவுடன் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை பெங்களூருவில் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்த வழக்கில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும், மற்ற மூவருக்கு தலா ரூ.10 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டது. அவர்களுக்கு விதிக்கப்பட்ட இந்த தண்டனையை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதில் ஜெயலலிதா உள்பட 4 பேருக்கும் வழங்கப்பட்ட தண்டனை ரத்து செய்யப்பட்டது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்தது. இதில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது. இந்த தீர்ப்பு வந்த நேரத்தில் ஜெயலலிதா ஏற்கனவே மரணம் அடைந்ததை அடுத்து அவரது பெயர் தீர்ப்பில் இருந்து கைவிடப்பட்டது. சசிகலா உள்பட 3 பேரும் சிறை தண்டனை அனுபவித்து வெளியே வந்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டு கர்நாடக அரசிடம் உள்ள சுமார் 27 கிலோ தங்க-வைர நகைகளை ஏலம் விட உத்தரவிடுமாறு பெங்களூருவை சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி பெங்களூரு சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதற்கிடையே ஜெயலலிதாவின் பொருட்களுக்கு உரிமை கோரி ஜெ.தீபா தாக்கல் செய்த மனு அந்த நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து, தமிழக அரசிடம் ஜெயலலிதாவின் நகைகளை கடந்த ஆண்டு மார்ச் 6, 7 ஆம் தேதிகளில் ஒப்படைக்கும்படி கர்நாடக அரசுக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெ.தீபா தாக்கல் செய்த மனுவில் அடிப்படையில் ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடம் வழங்க இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து ஜெயலலிதாவின் நகைகளை ஒப்படைக்கும் பணி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் ஜெ.தீபாவின் மனுவை உயர்நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்தது. இதையடுத்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடம் பிப்ரவரி 14, 15 ஆம் தேதிகளில் ஒப்படைக்கும்படி கடந்த மாதம் (ஜனவரி) உத்தரவிட்டது.
இந்நிலையில், பெங்களூரு சிட்டி சிவில் கோா்ட்டு வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி மோகன் முன்னிலையில் ஜெயலலிதாவின் நகைகள் சரிபார்க்கப்பட்டு தமிழக அரசிடம் ஒப்படைக்கும் பணி தொடங்கியது. இந்தப் பணி இன்றும் நாளையும் நடைபெறுகிறது. ஜெயலலிதாவின் நகைகள், அசையா சொத்துகளின் ஆவணங்கள் உள்பட 465 பொருட்களை உயர்நீதிமன்ற நீதிபதி மோகன் முன்பு சரி பார்க்கப்பட்டு தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படுகின்றன.
தங்க, வைர நகைகள், நகை மதிப்பீட்டாளர் மூலம் மதிப்பீடு செய்யப்பட்டு அவை முழுக்க வீடியோ, புகைப்படங்களாக பதிவு செய்யப்படுகிறது. பின்னர் அவை தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி எஸ்.பி. விமலா மற்றும் தமிழக அரசின் உள்துறை இணைச் செயலாளர் ஹனி மேரி ஆகியோரிடம் ஒப்படைக்கப்படுகிறது.
உச்சநீதிமன்றம் உத்தரவு
இதனிடையே, கர்நாடகா உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஜெ. தீபா, தீபக் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நகைகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க தடை இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தடை கோரிய ஜெ. தீபா, தீபக் ஆகியோரது மனு தள்ளுபடி செய்யப்படுவதாகவும், ஜெயலலிதாவின் 29 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க கர்நாடக அரசுக்கு ஆணையிட்டும் உள்ளது. இதனால், ஜெயலலிதாவின் நகைகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்ககும் நடவடிக்கை தடை இல்லாமல் நடக்கிறது.