வெளிமாநில ஆம்னி பேருந்துகளை தமிழகத்தில் இயக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவுக்கு பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு பேருந்துகள் மட்டுமல்லாமல் வெளியூர் செல்வதற்கு தனியார் ஆம்னி பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் அரசு பேருந்துகளை போலவே தனியார் ஆம்னி பேருந்துகளிலும் பயணிகள் கூட்டம் அலைமோதுவது வழக்கமான ஒரு நிகழ்வாக உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள பெரிய பேருந்து நிலையங்களில் ஆம்னி பேருந்துகளை நிறுத்துவதற்கு தனி இடம் அமைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தமிழகத்தில் வெளி மாநில ஆம்னி பேருந்துகளை தமிழகத்தில் இயக்க, அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த சில ஆண்டுகளாக வலுவடைந்து வருகிறது. இதனால் தொடர் பிரச்சனை எழுந்து வரும் நிலையில், வெளிமாநில ஆம்னி பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறி, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கே.ஆர்.சுரேஷ்குமார் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு மீதான விசாரணை கடந்த மாதம் 25-ந் தேதி நீதிபதிகள், பி.வி.நாகரத்னா, உஜ்ஜல் புயன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சார்பில், தமிழக அரசின் முடிவால் வெளி மாநில ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக வாதம் முன்வைக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வெளிமாநில ஆம்னி பேருந்துகள் இயக்கத்தை தடுத்து நிறுத்தக்கூடாது என இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பான பழைய ரிட் மனுக்களை ஒன்றிணைக்கவும், புதிதாக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்களுக்கு பதில் அளிக்கவும், தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தற்போது தமிழகத்தில் வெளிமாநில ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுமா என்பது குறித்து கேள்வியை எழுப்பியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“