அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த மனுவில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க டெல்லி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்தது. இந்தப் பொதுக்கூட்டத்தை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நடத்தினார்.
தொடர்ந்து இந்தக் கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் எதிர்ப்பு தெரிவித்தார்.
அவரின் தலைமையில்அவரது ஆதரவாளர்கள் வைத்திலிங்கம் மற்றும் மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பொதுக்குழு மேடையிலே கோஷமிட்டனர்.
இந்த நிலையில் பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். முன்னதாக இந்த வழக்கில் கருத்து தெரிவிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இந்த நிலையில் உயர் நீதிமன்ற தீர்ப்பு, அதிமுக பொதுக்குழு செல்லும் எனக் கூறியது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த நிலையில் வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை தசாரா விடுப்புக்கு பின்னர் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.
தற்போது அதிமுக இ.பி.எஸ்., அணி, ஓ.பி.எஸ்., அணி என இரு தரப்பாக செயல்பட்டுவருகிறது. இ.பி.எஸ்., ஒருவரை கட்சியில் இருந்து நீக்கினால், ஓ.பி.எஸ் உடனே அவருக்கு பொறுப்பு கொடுக்கிறார்.
அண்மையில் எடப்பாடி பழனிசாமி பண்ருட்டி ராமச்சந்திரனை கடுமையான தாக்கிப் பேசினார். தொடர்ந்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் அவருக்கு ஓ.பி.எஸ்., தரப்பு பதவி கொடுத்து கௌரவித்துள்ளது.
சி.வி. சண்முகம் பேட்டி
இருவருக்கும் இடையேயான அரசியல் போர் தமிழக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்திவருகிறது. இந்த நிலையில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகே பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி கூறியதாக முன்னாள் அமைச்சரும் இபிஎஸ் ஆதரவாளருமான சி.வி. சண்முகம் தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil