முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் வழக்கில் வரும் 17-ஆம் தேதி ஆளுநர் ஆர்.என். ரவியின் செயலாளர் ஆஜராக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அ.தி.மு.க ஆட்சி காலத்தில் பால் வளத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் ராஜேந்திர பாலாஜி. அப்போது, ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சாத்தூரைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவரிடம் ரூ. 30 லட்சத்தை, அ.தி.மு.க பிரமுகர் விஜயன் நல்லதம்பி பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விவகாரத்தில் கூறியது போல் வேலை வாங்கித் தராத காரணத்தால், போலீசாரிடம் ரவீந்திரன் புகாரளித்தார். இந்த வழக்கை ஏற்கனவே தமிழ்நாடு காவல்துறை விசாரித்து வருகிறது. இந்த வழக்கை விரைவாக விசாரித்து விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் ரவீந்திரன் மனு தாக்கல் செய்தார்.
அதன்பேரில், வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிராக ராஜேந்திர பாலாஜி தரப்பில் இருந்து மேல்முறையீடு மனுவும், இதே உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் ஒரு மேல்முறையீடு மனுவும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இன்று (மார்ச் 7) விசாரித்தனர். அப்போது தமிழ்நாடு தரப்பில் இருந்து ஆஜரான வழக்கறிஞர், "இந்த விவகாரத்தில் ராஜேந்திர பாலாஜி முன்னாள் அமைச்சர் என்பதால் அவருக்கு எதிராக வழக்கு தொடர ஆளுநரின் இசைவாணைக்காக காத்திருக்கிறோம்" எனக் கூறினார்.
மேலும், "இது தொடர்பான கோப்பு கடந்த ஆண்டு பிப்ரவரி 4-ஆம் தேதி முதல் நிலுவையில் உள்ளது. ராஜேந்திர பாலாஜியின் மீது குற்ற வழக்கு தொடுப்பதற்கான இசைவாணையை வழங்கக் கோரி மாவட்ட எஸ்.பி., டி.ஜி.பி-க்கு கடந்த ஆண்டு நவம்பர் 18-ஆம் தேதி கடிதம் எழுதப்பட்டது. இசைவாணையை பெறுவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைக் கேட்ட நீதிபதிகள், "எதற்காக இசைவாணைக்கு இன்னும் கையெழுத்திடவில்லை? இதற்கான காரணத்தை நாங்கள் அறிய விரும்புகிறோம். எனவே, ஆளுநரின் முதன்மைச் செயலாளர் வரும் மார்ச் 17-ஆம் தேதி நேரில் ஆஜராகி, தமிழ்நாடு அரசு எழுதிய அந்த இசைவாணை கடிதம் தொடர்பாக ஆளுநர் எடுத்த நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்" என உத்தரவிட்டனர்.