சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு வழங்க வேண்டிய ரூ.380 கோடி வட்டித் தொகையை முழுமையாக வழங்குமாறு ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கடும் நஷ்டத்தை சந்தித்த நிலையில், 2015 ஆம் ஆண்டு கலாநிதி மாறன் தன் வசமிருந்த ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் 58.46 சதவீதப் பங்குகளையும், அந்நிறுவனத்தின் தற்போதைய தலைவர் அஜய் சிங்கிடம் விற்றார்.
இதையும் படியுங்கள்: ‘தமிழக அமைதிக்கு ஆளுனர் ஆர்.என் ரவி அச்சுறுத்தல்’: முதல் முறையாக ஜனாதிபதிக்கு ஸ்டாலின் அதிரடி புகார் கடிதம்
அப்போது செய்துக் கொண்ட ஒப்பந்தத்தின்படி, நிறுவனத்தின் நடைமுறை செலவுகள், கடன் தவணை செலுத்துதல் உள்ளிட்டவற்றில் கலாநிதி மாறன் பங்களிப்பு வழங்கினார். இந்த தொகையாக ரூ.679 கோடியை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தனக்கு தர வேண்டும் என்று கலாநிதி மாறன் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதையடுத்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கலாநிதி மாறனுக்கு ரூ.579.08 கோடி அசல் தொகையை வழங்கியது. ஆனால், வட்டியை வழங்கவில்லை.
இந்நிலையில் வட்டித் தொகையில் ரூ.75 கோடியை செலுத்த கால அவகாசம் கோரிய நிலையில், மூன்று மாதங்களுக்குள் செலுத்துமாறு உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு உத்தரவிட்டது. ஆனால் கூடுதல் கால அவகாசம் வேண்டும் என்று ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கோரிக்கை விடுத்தது.
இந்நிலையில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், கலாநிதி மாறனுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.380 கோடி வட்டித் தொகையை வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
நிலுவையில் இருக்கும் வட்டி தொகை 2020 அக்டோபர் மாதம் 242 கோடி ரூபாயாக இருந்தது. இது பிப்ரவரி 2023 இல் 362 கோடியாகவும், தற்போது 380 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. இந்த தொகையை உடனடியாக வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil