தமிழ்நாடு அரசு சார்பாக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களை ஆளுநருக்கு அனுப்பும் போது, அவர் வேண்டுமென்றே ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்வதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. இதனால், ஆளுநர் ஆர். என். ரவிக்கும், தமிழ்நாடு அரசுக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது.
மேலும், பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமனத்திலும் ஆளுநர் ஆர். என். ரவியின் தலையீடு அதிகமாக இருக்கிறது என தமிழ்நாடு அரசு தெரிவித்தது. இந்த விவகாரங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது.
இந்த மனுக்கள் மீதான வழக்கு விசாரணை கடந்த சில நாட்களாக நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா, ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதன்படி, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவது அரசிலயமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றும், அவ்வாறு திருப்பி அனுப்பும் மசோதாக்களை பேரவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பும் போது, அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் எனவும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
ஆனால், நிறைவேற்றப்பட்ட மசோதாவில் முரண்படுவதாக ஆளுநர் கருதினால் அதில் என்ன செய்ய முடியும் என்றும், அதனால் தான் மசோதாக்கள் மீது முடிவு எடுக்கப்படவில்லை எனவும் ஆளுநர் தரப்பில் இருந்து பதிலளிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "மசோதா சரியாக உள்ளது. அதில் எந்த முரணையும் காணவில்லை. மறுபரிசீலனை செய்ய திருப்பி அனுப்பவில்லை. எனினும், மசோதாவை கிடப்பில் போட்டுவிட்டு, பின்னர் குடியரசு தலைவர் முடிவெடுக்க வேண்டும் என அனுப்புவது என்ன நடைமுறை?" என்று கேள்வி எழுப்பினர்.
மேலும், "அரசியல் சாசன நிர்ணய சபையில் ஆளுநருக்கான அதிகாரம் என்ன என்பதை அம்பேத்கர் தெளிவாக சுட்டிக் காட்டியுள்ளார். ஆளுநருக்கு தனியாக விருப்ப உரிமை இல்லை. மசோதாவில் உள்ள முரணை ஆளுநர் அரசிடம் வெளிப்படையாக சுட்டிக் காட்டலாம்" என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
அதனடிப்படையில் இரு தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றன. அதன்பேரில், அனைத்து தரப்பும் ஒரு வாரத்திற்குள் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், வழக்கிற்கான தீர்ப்பையும் ஒத்திவைத்தனர். இதனிடையே, ஆளுநர் தரப்பு வாதங்களை நிராகரிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு வாதிட்டது.