2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுக்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார்.
இதனை எதிர்த்து ஒ.பன்னீர்செல்வம் தரப்பில் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மேல்முறையீட்டு மனுக்கள் நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் இன்று நடைபெற்ற தொடர்ச்சி விசாரணையின்போது, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தங்களது வாதங்களை முன்வைத்தனர்.
அப்போது, இடைக்கால பொதுச்செயலாளர் ஆக வேண்டும் என்பதற்காக மூத்த தலைவரும், பொருளாளருமான ஓ.பி.எஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
நீக்கப்படுவதற்கு முன்னர் விளக்கம் கேட்டு எந்த நோட்டீசும் கொடுக்கப்படவில்லை” எனத் தெரிவித்தனர். தொடர்ந்து முதலில் இரு பதவிகளை (கழக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்) எடப்பாடி பழனிசாமிதான் கோரினார் எனத் தெரிவிக்கப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி தரப்பும் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தது. தொடர்ந்து, “உங்கள் கட்சி விவகாரம் நீதிமன்றங்களிலேயே இருந்தால், கட்சியின் செயல்பாடுகளை எவ்வாறு நிர்வகிப்பீர்கள்? என இ.பி.எஸ், ஓ.பி.எஸ்க்கு உச்ச நீதிமன்றம் கேள்வியெழுப்பியது.
இதையடுத்து இரு தரப்பும் வரும் திங்கள்கிழமைக்குள் (ஜன.16) எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும் எனக் கூறி வழக்கை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/