Advertisment

5 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு இ.டி சம்மன்: தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி

சட்ட விரோத மணல் விற்பனை தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பிய விவகாரத்தில், தமிழ்நாடு அரசு எப்படி ரிட் தாக்கல் செய்ய முடியும்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளார்கள். 

author-image
WebDesk
New Update
Supreme Court questioned over TN govt challenging ED summons to District Collectors in sand mining scam Tamil News

அமலாக்கத்துறை விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டாமா? என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளார்கள். 

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Supreme Court | Tamilnadu Government: தமிழக அரசின் நீர்வளத் துறை சார்பில் ஆன்லைன் முன்பதிவு மூலம் ஆற்று மணல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில், மணல் வாங்குபவர்களுக்கு அரசு சார்பில் இ-ரசீது வழங்கப்படுகிறது. இருப்பினும், ஆற்று மணல் விற்பனையில் முறைகேடு நடப்பதாகவும், உரிய நடைமுறையை பின்பற்றாமல் சட்டவிரோதமாக மணல் விற்கப்படுவதாகவும், இதனால் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு நடப்பதாகவும் புகார் எழுந்தது.

Advertisment

சோதனை 

இதனையடுத்து, கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி ஒரே நேரத்தில் புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினத்தை சேர்ந்த தொழிலதிபர் ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம், ரத்தினத்தின் உறவினர் கோவிந்தன், மணல் குவாரி அதிபர் கரிகாலன் மற்றும் பொதுப்பணித்துறையில் பணியற்றிய ஓய்வுபெற்ற பொறியாளர் திலகம், நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா ஆகியோருக்கு சொந்தமான வீடுகள் மற்றும் எழிலகத்தில் உள்ள நீர்வளத்துறை அலுவலகம் என மொத்தம் 34 இடங்களில் சட்டவிரோத பண பரிமாற்றம் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்.

இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்த இந்த சோதனையில் மணல் குவாரி அதிபர் ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம், கரிகாலன் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் வீடுகளில் இருந்து கணக்கில் வராத பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், ரூ.12.82 கோடி ரொக்க பணம், ரூ.56.86 லட்சம் மதிப்புள்ள 1024 கிராம் தங்கம் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சம்மன் 

இந்த சோதனையை தொடர்ந்து, 10 மாவட்ட ஆட்சியர்கள், நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா, ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர் திலகம் ஆகியோரை விசாரணைக்கு ஆஜராக கூறி அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி இருந்தது. இதனையடுத்து, கடந்த நவம்பர் 20 ஆம் தேதி தமிழக நீர்வளத்துறையின் முதன்மை பொறியாளர் முத்தையா சில முக்கிய ஆவணங்களுடன் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜரானார். 

வழக்கு - மேல்முறையீடு 

இந்நிலையில், தமிழக அரசின் பொதுப் பணித்துறைச் செயலா், நீா்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலா், திருச்சி, தஞ்சாவூா், கரூா், அரியலூா் மற்றும் வேலூா் என 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை முடிவில் அமலாக்கத்துறை சம்மனுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதனை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. 

சரமாரி கேள்வி 

இந்நிலையில், இந்த மேல்முறையீடு மனு நீதிபதிகள் பேலா எம் திரிவேதி மற்றும் பங்கஜ் மித்தல் ஆகிய இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.  அப்போது நீதிபதிகள், இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எப்படி ரிட் மனு தாக்கல் செய்ய முடியும்?. எந்த சட்டத்தின் கீழ் ரிட் மனு தாக்கல் செய்யலாம்?. மாவட்ட ஆட்சியர்கள் தனிப்பட்ட முறையில் ரிட் மனு தாக்கல் செய்யலாம். அமலாக்கத்துறை விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டாமா? என சரமாரியாக கேள்வி எழுப்பினார்கள். 

தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோஹத்கியும், மாவட்ட ஆட்சியர்கள் சார்பில் அமித் ஆனந்த் திவாரியும் ஆஜராகி வாதாடினர். அப்போது முகுல் ரோஹத்கி, 'தமிழக அரசுக்கு எதிராக அமலாக்கத்துறை எப்படி மனுக்களை தாக்கல் செய்திருக்கிறதோ, அதேபோல் இந்த விவகாரத்தில் விடுவிப்பு கோரி நீதிமன்றத்தை நாட மாவட்ட ஆட்சியர்களுக்கு உரிமை உண்டு' என்றும், 'மாவட்ட ஆட்சியர்கள் குற்றவாளிகள் அல்ல' என்றும்  வாதிட்டார். 

"சென்னை உயர்நீதிமன்றம் நவம்பரில் உத்தரவு பிறப்பித்துள்ளது. நாம் இப்போது பிப்ரவரியில் இருக்கிறோம். மாவட்ட ஆட்சியர்கள் இந்த விவகாரத்தில் ஈடுபடவில்லை. அதிகார வரம்பில்லாமல் அமலாக்கத்துறை செயல்பட்டால் அவர்கள் ஒத்துழைக்கவும் தேவையில்லை. இது கூட்டாட்சியின் பிரச்சினை." என்றும் அவர் கூறினார். 

இதேபோல், "அமலாக்கத்துறை சம்மன்  கிரிமினல் அல்லது திட்டமிடப்பட்ட குற்றத்தை குறிக்கவில்லை" என்று மூத்த வழக்கறிஞர் அமித் ஆனந்த் திவாரி கூறினார்.

அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு, 'மாவட்ட ஆட்சியர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்ல. விசாரணைக்காக மட்டுமே சம்மன் அனுப்பப்பட்டுள்ளது' என்று தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் விசாரணையை மார்ச் 4ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Supreme Court Tamilnadu Government
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment