/indian-express-tamil/media/media_files/oY0UYYYHmuEmc7IhSnJS.jpg)
பண மோசடி வழக்கு: செந்தில் பாலாஜி கோரிக்கையை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்டு
கடந்த 2011-2015 அ.தி.மு.க. ஆட்சியில், வேலை வாங்கித் தருவதாகக் கூறிப் பணம் பெற்றதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கு தொடர்பான 2022 உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் உள்ள சில கருத்துகளை நீக்க முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. அந்தக் கருத்துகள் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கின் விசாரணையில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.
இந்த விவகாரம் குறித்து, செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஜோய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு திங்கட்கிழமை விசாரித்தது. அப்போது நீதிபதிகள், "2022-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் எந்தவொரு வார்த்தையையும் மாற்றவோ, எந்தத் தீர்ப்பையும் தொடவோ மாட்டோம். தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள் ஓய்வு பெற்ற பிறகு, அவர்களால் அளிக்கப்பட்ட உத்தரவுகளில் மாற்றம் கோரி மனு தாக்கல் செய்யும் நடைமுறையை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என நீதிமன்றம் ஏற்கனவே முடிவு செய்துள்ளது" என்று குறிப்பிட்டனர்.
நீதிபதி சூர்ய காந்த், "நீதிபதிகள் ஓய்வுபெற்ற பிறகு அவர்களின் உத்தரவை மாற்றக் கோரி மனு தாக்கல் செய்வது, தங்களுக்குச் சாதகமான முடிவைப் பெறுவதற்காக, நீதிமன்றத்தை தேர்ந்தெடுக்கும் மோசமான நடைமுறைக்குச் சமம். இந்த ஒரு காரணத்திற்காகவும் இதுபோன்ற மனுக்களை தள்ளுபடி செய்யலாம்" என்றார். இருப்பினும், நாங்கள் எதுவும் நீக்கப்போவதில்லை, எந்தவொரு தீர்ப்பையும் மாற்றப்போவதில்லை. ஆனால், இந்தக் கருத்துக்கள் விசாரணையில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதை மட்டுமே நாங்கள் தெளிவுபடுத்துகிறோம். இதுவே குற்றவியல் நீதி பரிபாலனத்தின் அடிப்படைக் கோட்பாடு என்று நீதிபதிகள் கூறினர்.
இந்த விவகாரம் தொடர்பாக செந்தில்பாலாஜி தரப்பில் 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், 2022 செப்டம்பரில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, அமலாக்கத்துறை விசாரணையைத் தொடங்க அனுமதித்த மே 2023 தீர்ப்பு மற்றும் அவரது ஜாமீனை ரத்து செய்ய மறுத்தது ஆகியவை தொடர்பான கருத்துகளை நீக்கக் கோரப்பட்டிருந்தது.
செந்தில்பாலாஜி தரப்பு மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், "இந்த தீர்ப்பில் உள்ள கருத்துகள், அவருக்கு எதிரான விசாரணையில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதை மட்டுமே நாங்கள் வலியுறுத்துகிறோம்" என்றார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தீர்ப்பில் உள்ள கருத்துகள் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதைத் தெளிவுபடுத்தி, இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்று உத்தரவிட்டனர்.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், இந்த வழக்கில் 350-க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட வேண்டியுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, இந்த மனுவை ஆகஸ்ட் 13-ஆம் தேதி விரிவாக விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.